வீட்டின் கதவை உடைத்து சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை அகதி!

இந்தியா – செய்யாறு அருகே தவசி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் 36 வயதுடைய உதயன் என்ற இலங்கை அகதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 17 வயதுடைய சிறுமி, இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வில் தேர்ச்சி பெறாத அந்த சிறுமி, மறு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதுடன், செய்யாறு – சத்திய மூர்த்தி தெருவில் உள்ள அக்காவின் வீட்டில் தங்கி படித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீ்ட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உதயன் என்ற இலங்கை அகதி வீட்டின் கதவை உடைத்து வலுகட்டாயமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும், “இது பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை மாட்டி விட்டால் கொலை செய்து விடுவேன்” என்று குறித்த சிறுமியை மிரட்டி விட்டு உதயன் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்தவற்றை அக்காவிடம் தெரிவித்து அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதில், சந்தேகநபரை போக்சோ சட்டம் உட்பட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உதயனை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.