அழிவை நோக்கிச்செல்லும் மனிதர்கள்: அவர்களுக்கெதிராய் படையெடுக்கும் சிங்கங்கள்

இன்றைய டிஜிட்டல் உலகில் நிஜங்களை விட மாயைகளுக்குத்தான் மதிப்புக்கள் அதிகம் என ஆகிவிட்டன, இன்று நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமில்லை, பருகும் நீர் அது கூட சுத்தமில்லை, நீர், நிலம் என இவ்விரண்டுமே தமது தன்மையை இழந்து விட்டன.

இயற்கை மாசுபட்டுவிட்டது, நாம் மாசுபடுத்தி விட்டோம்! இதன் காரணமாகத்தான் இலவசமாய் கிடைத்த இயற்கையான பொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டு தற்போது மாயைத் தேடிக்கொண்டிருக்கின்றோம், மாயைகளுடனேயே எமது வாழ்வினையும் கொண்டு நடத்துகின்றோம்.

தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டது, எமது தேவைகள் அதிகரித்தது, ஆதலால் இயற்கையை அழித்தோம், பசுஞ்சோலைகளாய் பூத்துக்குழுங்கிய காடுகளை அழித்து நம் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டோம், நச்சுத் தொழிற்சாலைகளை அமைத்தோம்.

இதனால் காடுகளில் வாழ்ந்த ஐந்தறிவு ஜீவன்கள் தமது வாழ்விடங்களை இழந்தன, அந்த உயிரினங்களின் வாழ்விடத்தில் நாம்தான் அத்துமீறி உள்நுழைந்துள்ளோம் என்பதை இன்று எம்மவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது வாழ்விடம் பறிபோனால் ஏற்படும் துயரம் என்னவென்பது யாவரும் அறிந்ததே, தமது சொந்த இடங்களுக்காக, அந்த இடத்தில் சுதந்திரமாக வாழ்வதற்காக சரித்திரத்தில் இடம்பெற்ற போர்கள் கொடிய யுத்தங்கள் இந்த உலகில் அதிகம்.

இன்று உலகத்தின் எல்லா பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் எம் சக உறவுகளுக்குத் தெரியும் இந்த கொடூரத்தின் முழு வேதனை.

உணர்வுகள் என்பது அனைவருக்கும் ஒன்றுதான், அது மனிதனாக இருந்தாலும் சரி, ஐந்தறிவு உயிரினமாக இருந்தாலும் சரி!

இன்று வலுவான நிலையில் உள்ள மனித இனம், தன்னை அறியாமலேயே பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. மக்களுக்கு உண்மை புரியாததால், இவ்வாறு காடுகளை அழித்து தொழிற்சாலைகளை நிறுவினால் நாம் மேலும் மேம்படலாம் என நினைக்கின்றனர்.

காடுகள் இல்லையெனில் ஆறுகள் இல்லை, நீர் இல்லையெனில் உலகில் உயிரினங்கள் ஏதும் இல்லை. இதை அறிந்தும்கூட மதிகெட்டவராய் செயற்படும் மனிதர்களால் அதிகம் பாதிக்கப்படுவது தற்போதைய மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்களும், எதிர்கால சந்ததியினரும்தான்.

தமது வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் காட்டில் உள்ள விலங்குகள் உணவு தேடி, வாழ்விடம் தேடி மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. இதன் காரணமாக மனிதன் மற்றும் விலங்குகளுக்கிடையிலான மோதல் அதிகமாக இடம்பெறுகின்றது.

இந்த மோதலில் அதிகமாக பாதிக்கப்படுவது விலங்குகள்தான், தனது பாதுகாப்பிற்காக தன் இனத்தை தானே கொன்று புசிக்கும் இந்த மனித இனத்தில் தன்னை பாதுகாக்க ஒரு உயிரினத்தைக்கொல்வது ஒன்றும் பெரிதல்ல. இதற்கு பெரிய எடுத்துக்காட்டு அண்மைய கிளிநொச்சி சம்பவம்.

மனித வாழ்விடத்தை நோக்கி வந்த ஒரு சிறுத்தையினை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என்போர் இணைந்து அடித்து கொன்றமை நாடளாவிய ரீதியில் தற்போது முனுமுனுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், அண்மையில் தமது வாழ்விடங்களை தவிர்த்து மனித வாழ்விடங்களை நோக்கி படையெடுத்துள்ள ஒரு சிங்கக்கூட்டம், பாதையை மறித்து வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்த ஒரு சம்பவம் வெளி நாடொன்றில் பதிவாகியிருந்தது.

தமது வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியலில் ஈடுபடுவதுபோல குறித்த சிங்கக்கூட்டம் பாதையை மறித்து நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.