இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் மோதவுள்ளது.
இத்தொடருக்கான தெரிவுகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்றது.
இத்தொடருக்கான இறுதி இலங்கை அணியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் வடக்கு மாகாண அணி சார்பாக ஜொலித்த இரு வீரர்களே இந்த இலங்கைக் குழாத்தினுள் உள்வாங்கப் பட்டிருக்கின்றார்கள்.
யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே இலங்கை அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள்.
வேகப்பந்து வீசும் சகலதுறை வீரரான மதுஷன் ஏற்கனவே வடமேல் மாகாண அணிக்கெதிராக ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் வேகமாக 34 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
மேலும் வடக்கின் மாபெரும் போரிலும் அதிரடியாக அரைச்சதம் கடந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
இவர் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இறுதி 11 பேர் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அற்புதமான வலது கை வெளியே திரும்பும் சுழல்பந்து வீச்சாளரான விஜாஸ்காந் தொடர்ச்சியாக மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிராக சுழலில் அசத்தியவர் என்பதும் சிறப்பம்சமாகும்.
அத்தோடு தேவையான நேரத்தில் துடுப்பாடும் வல்லமையும் கொண்டவர்.
19 வயதிற்குட்பட்ட அணித் தேர்வுகளை பிரதான பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரட்ன, வேகப்பந்து பந்துவீச்சாளர்களான சமிந்த வாஸ் மற்றும் சமில கமகே ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் முதன்முறையாக இடம்பெற்ற வீரர்களை வாழ்த்துவதுடன் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களையும் பாராட்டுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.