வாள்வெட்டு தாக்குதல் நடத்திய ஆவாகுழு உறுப்பினர்கள்; யாழ் மக்களின் துணிச்சலான செயல்!

கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலை சேர்ந்த மூவர் இளைஞர்கள் மற்றும் பொது மக்களால் பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் இன்று (10.06.2018) முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியதில் இளைஞன் காயமடைந்தார்.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பித்த கும்பலை, அந்தப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துரத்தியதில் கும்பலில் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டார், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

பிடிபட்டவர் மக்களால் தாக்கப்பட்ட நிலையில், அவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் பிடிபட்டனர்.

ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தும் ஆனைக்கோட்டையை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 சந்தேகநபர்களும் மானிப்பாய் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் நாளை (11.06.2018) யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.