“நான் டிரெய்லரைக் கலாய்ச்சா அவங்களுக்கென்ன?!” – கஸ்தூரி பதில்

`தமிழ்ப் படம்’ மாதிரியே ‘தமிழ்ப்படம் 2.0’விலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். `டிராஃபிக் ராமசாமி’ படத்துல ஒரு சென்டிமென்ட் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். தெலுங்குல நீரவ் மோடி வழக்கு பற்றிய `ஹரி ரங்கா ஹரி’ படத்துலேயும், `போலீஸ் வலை’ங்கிற படத்துல போராளியாவும் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இதுக்கிடையில ட்விட்டர்ல ஏதாவது பேசுறது என்னோட பொழுதுபோக்கா மாறிடுச்சு!” என்கிறார், கஸ்தூரி. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்து, “முந்தா நாளு வந்த டீசர்ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு டிரெய்லர். ஸ்ஸ்ஸப்பா!” என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் கொதித்தெழுந்து கமென்ட்ஸ் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக கஸ்தூரியிடம் பேசினோம்.

கஸ்தூரி

“உங்களை இழிவுபடுத்தும் விதமாக வரும் கமென்ட்டுகளை எப்படி எடுத்துக்குறீங்க?” 

“எனக்கு  பேச்சுல இரண்டு நிலைப்பாடு இருந்தா பிடிக்காது. என்னை அவதூறா பேசுறதுக்கு முன்னாடி அவங்க முகத்தை முதல்ல கண்ணாடியில பார்க்கச் சொல்லுங்க. ட்விட்டர்ல நான் யார் பெயரையும் குறிப்பிடமா பொதுவா ஒரு டிரெய்லரைப் பத்தி சொன்ன கமென்ட்டுக்கு எதுக்கு மத்தவங்க பொங்கி எழணும்? அப்போ அந்த ஹீரோவோட டிரெய்லர் பாடாவதியா இருக்குனு அவங்க ரசிகர்களுக்குப் புரிஞ்சிருக்குனுதானே அர்த்தம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மூணு டிரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுல நான் எந்த டிரெய்லரைப் பற்றி கருத்து சொன்னா, மத்தவங்களுக்கு என்ன? `உன் தொழிலுக்கு ஏற்றமாதிரி பேசு, உனக்கென்ன தெரியும்’னு என்னை வம்புக்கு இழுக்குறதுல அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம்.”

“ட்விட்டரில் இதுவரை நீங்க கற்றுக்கொண்ட பாடம் ஏதாவது…?” 

“ஆண்கள் தப்பு தப்பாக எது வேணும்னாலும் பேசலாம். பெண்கள் அதைக் கண்டித்து எதுவும் சொல்லக் கூடாது. நடிகைகள் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது. அப்படி நடித்தால், அவங்க குடும்பத்துக்குத் துரோகம் பண்றாங்க, அவங்க கேரக்டர்ல தப்பு இருக்குனு சொல்றாங்க. இதுவே நடிகர்கள் தொடர்ந்து நடிச்சா, அவங்க `செம கெத்து.’! தாத்தா வயசு நடிகர்கள் பேத்தி வயசு நடிகர்களோட டூயட் பாடுறதை இந்தச் சமூகம் மதிக்கும். பெண்கள் முன்னேற்றம் அடையணும்னு முற்போக்கா பேசுற இந்தச் சமூகம்தான், பெண்களை இழிவுபடுத்தவும் செய்யுது. இந்தமாதிரி சில விதிமுறைகள் சமூக வலைதளங்கள்ல இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன்!”

“ட்விட்டர்ல உங்களை கார்னர் பண்றாங்கனு நீங்க நினைக்கிறீங்களா?”  

“ `There is a difference between Criticism and Abuse’. நான் ட்விட்டர்ல விமர்சனம் பண்றேன். அதுக்குப் பதிலாக எனக்கு வர்றது `இழிவு’ மற்றும் `கொச்சை வார்த்தைகள்’. நான் என்ன கருத்து சொல்றேன்னு இந்தச் சமூகத்துக்குத் தெரியும். ஆனா, கமென்ட்ல யாருனே தெரியாத ஒருத்தர் என்னைப் பார்த்து கெட்ட வார்த்தை பேசுறது ரொம்ப அபத்தமான விஷயம். ஒளிஞ்சுக்கிட்டு கூட்டத்துல இருந்து கத்துறது கோழைத்தனம். இந்த மாதிரி தன்மான சிங்கங்களுக்குப் பதில் சொல்றதுனால எனக்குதான் நேர விரயம் ஆகுது. தைரியம் இருந்தா, நேர்ல வந்து `நான் பண்றது தப்பு’னு சொல்லுங்க. திருத்திக்கிறேன். கண்ணாடி வீட்ல இருந்து கல் எறிஞ்சா, உங்க வீட்டுக்குத்தான் முதல் பாதிப்பு. இந்த நிமிடம் வரைக்கும் நான் யார் மேலேயும் வழக்கு பதிவு பண்ணதில்லை. பண்ண வெச்சுடாதீங்க!”

ஒரு நடிகை இப்படித்தான் இருக்கணும், ஒரு பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு இந்தச் சமுதாயத்துல ரூல்ஸ் வெச்சிருக்காங்க. விக்ரமும், விஜய் சேதுபதியும் சின்னப் பையன் கேரக்டர்லேயும் நடிப்பாங்க, வயசானவங்க மாதிரியும் நடிப்பாங்க. அதையே நடிகைகள் பண்ணா ஒத்துக்க மாட்டாங்க. ஒரு தடவை வில்லியா நடிச்சுட்டா, கடைசி வரைக்கும் அந்த நடிகை வில்லிதான்!. கஸ்தூரி கவர்ச்சியா இருந்தா, `இந்த வயசுல உனக்குக் கவர்ச்சி தேவைதானா’னு கேள்வி கேட்பாங்க. `நீ என்ன உத்தமியா’, `நீ என்ன பத்தினியா’னு கேள்வி கேட்பது அவங்க மனக்கோளாறு. அவங்க அப்படி இருக்கிறதுனாலதான் மத்தவங்களையும் அப்படியே நினைக்கத் தோணுது. எண்ணம் போல் செயல்.

எனக்கு ஒருத்தர், `பெண்கள் எத்தனை பேருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு மிஷின் தேவை’னு கமென்ட் பண்ணியிருக்கார். அப்போ ஆம்பளைங்களுக்குக் கற்புனு ஒண்ணு இல்லையா? கழுத்துக்கு மேல பெண்களை பார்க்காதவங்களோட கருத்துப் பரிமாற்றமே பண்ணக் கூடாது. `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’னு சொல்வாங்க. அது உண்மைதான். நான் என்ன பேசுறேன்னே புரியாத எதிராளி கூட்டத்தோட பேசி பலன் இல்லை.” என்று ஆவேசத்துடன் முடித்தார், கஸ்தூரி.