`ஒருகட்டத்தில் குடும்ப சுமையைச் சமாளிக்க முடியவில்லை’ – கணவரை இழந்த முதல் பெண் போர்ட்டர் உருக்கம்

பயணிகளின் சுமைகளைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்லும்போது, `மூன்று குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும்’ என்று நினைத்துக்கொள்வேன். அப்போது, சுமைகூட சுகமாகத்தான் இருக்கிறது என்று நெகிழ்கிறார் மஞ்சு தேவி.

மஞ்சு தேவி ரயில்வே

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால், சுமை தூக்கும் தொழிலான கூலித் தொழிலில் மட்டும் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வருவதுமில்லை விரும்புவதுமில்லை. இதற்குக் காரணம், அதிகப்படியான பாரங்களைப் பெண்களால் சுமக்க முடியாது என்பதுதான். ஆனால், இதையும் முறியடித்துள்ளார் மஞ்சு தேவி என்ற தன்னம்பிக்கை நிறைந்த பெண்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மஞ்சு தேவி. இவருக்கு, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை இழந்துள்ளார். இதனால், குடும்பத்தின் சுமை முழுவதும் இவர்மீது விழுந்தது. அன்றாட செலவு ஒருபக்கம் குடும்ப பிரச்னை மறுபக்கம் உளவியல் பிரச்னை எனத் திணறிய மஞ்சு தேவிக்கு, அவரின் அம்மா மோகினி பக்க பலமாக இருந்திருக்கிறார். அவர், கொடுத்த தைரியத்தின் பேரில் துணிச்சலான வேலையைச் செய்ய தீர்மானித்திருக்கிறார். ஜெய்ப்பூர் ரயில்வேயில் தன் கணவர் செய்துகொண்டிருந்த சுமைதூக்கும் கூலி வேலையில், சேர்ந்து குடும்பத்தின் சுமையை இறக்கி வைக்கலாம் என முடிவு செய்துள்ளார்.

முதல் பெண் போர்ட்டர்  மஞ்சு தேவி

இதுகுறித்து பேசிய அவர், `என் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். ஒருகட்டத்தில் குடும்ப சுமையைச் சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில், என் அம்மா, கணவர் செய்த வேலையை எடுத்துச் செய் என அறிவுறுத்தினார். அவர் கொடுத்த தைரியத்தில், தன்னம்பிக்கையுடன் ஜெய்ப்பூர் ரயில்வே நிலையத்தில் கூலித் தொழிலாளியாக வேலையில் சேர விண்ணப்பித்தேன்.

அப்போது, ரயில்வே அதிகாரி ஒருவர், `சுமைதூக்கும் பெண் கூலிகள் இங்கு யாரும் வேலை செய்யவில்லை. ஆண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக வேலை செய்ய வேண்டும். இது மிகவும் சவாலாக இருக்கும். ஆகையால், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வேலையில் சேருங்கள்’ என்றார். இருப்பினும், நான் வேலையில் சேர்ந்தேன். எனது சீருடையை நானே வடிவமைத்தேன்’ என்றார்.

இதன்பிறகு, வட-மேற்கு ரயில்வே துறையில், முதல் பெண் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்துள்ளார். சுமைதூக்கும் தொழிலாளர்களின் அடையாளமாகப் போர்ட்டர் உரிமம் (porter licence) எனப்படும் அடையாள எண் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், பணியில் சேர்ந்த மஞ்சுதேவிக்கு, அவரின் கணவரது அடையாள உரிமம் எண்ணான 15 வழங்கப்பட்டது சிறப்பம்சம்.