ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் ஆட்சிபீடத்தில் இருந்தால் ஒட்டுமொத்த மக்களும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையே ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதை தெரிந்துகொண்டே அவரால் முடியாது என்பதை கூறிவருவதாக தெரிவித்த அவர், ராஜபக்கவினர் மீது காணப்படுகின்ற அச்ச உணர்வு இன்னும் நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களின் மனங்களில் இருந்து நீங்கவில்லை என்றும் கூறினார்.
கண்டி – மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மல்வத்துப்பீட விகாரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அவர் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றதோடு ஆலோசனையும் நடத்தியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக ஸ்ரீகொத்தவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ராஜபக்சவின் ஆட்சி மீண்டும் வந்தால் ஊடகவியலாளர்களுக்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளவே நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மல்வத்துப்பீட மகாநாயக்கரிடம் ஆசிபெற்று திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இன்று வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக குறைந்த பட்சம் 5 இலட்சமாவது சமுர்த்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதையே கூறுகிறேன்.
ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டு மக்களும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலையே இன்று ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தால் ஒட்டுமொத்த நாடுமே தற்கொலை செய்துகொள்ள நேரிடும்.
ராஜபக்சவினர் மீது மிகுந்த பயம் காணப்படுவதாக அரச தரப்பிலுள்ள பலரும் கூறுவது தொடர்பாகவும், அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீர, கோட்டாபய ராஜபக்ச மீது தனக்கும் அச்சம் காணப்படுவதாக கூறிய விடயம் குறித்தும் ஊடகவியலாளர்கள் இதன்போது மஹிந்த ராஜபக்சவிடம் வினவினர்.
ஐயோ எனக்குத் தெரியாது ஏன் அவ்வளவு அஞ்சுகிறார்கள் என்று. பயமில்லை என்று கூச்சலிட்டு பேசுகிறவர்கள் உள்ளே அச்சத்திலேயே இருக்கிறார்கள் என்பதை மக்களே அறிவார்கள்.
இதன் காரணமாகவே கேள்விகளும் கேட்கப்படுகிறது. வீரர்களைப்போன்று பேசுகிறவர்களின் உள்ளத்தில் அச்ச உணர்வு இருக்கிறது.
எங்களை திருடர்கள் என்றும் சொத்துக்களை மறைத்துக் கொண்டிருப்பவர்கள் என்றும் கூறி வழக்குகளையும் தொடர்ந்தார்கள்.
அன்று ரணிலுக்கு வெற்றிபெற முடியும் என்பதை தெரிந்துகொண்டுதான் ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிபெற முடியாது என்று கூறியிருந்தார்.
இன்று எங்களால் வெற்றிபெற முடியும் என்பதை தெரிந்துகொண்டே மஹிந்தவுக்கும், கோட்டாபயவுக்கும் முடியாது எனக் கூறுகிறார்கள்.






