நீடிக்கிறது அவலம்: 18 பேர் உயிரிழப்பு;1,38,000 க்கும் மேற்பட்டோர் தவிப்பு

சப்ரகமுவ, மேல், வட மேல்  மாகாணங் களில் பிற்பகல் வேளைகளில் கடும் மழை பொழிந்து வரும் நிலையில்  நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்கள்  வெகுவாக பாதிப் படைந்துள்ளன.

அடை மழை, வெள்ளம் கார  ணமாக குருணாகல், புத்தளம், இரத்தின  புரி,கம்பஹா, கொழும்பு, களுத்துறை  மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் 30404 பேரும் கம்பஹாவில் 42053 பேரும்  குருணாகலில் 8556 பேரும் புத்தளத்தில் 31068 பேரும்  களுத்துறையில் 5131 பேரும் கொழும்பில்  9475 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள் ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. 

இதேவேளை, நேற்று முன்தினமும் மலை யகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு, அதிகாலை வேளைகளில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில்,  மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களுக்கு பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்துள்ளது. இதனால் குளங்கள், நீர்த்தேக்கங்கள் மீளவும் நிரம்பும் நிலைக்கு வந்துள்ளன.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் தப்போவ நீர்த்தேக்கம் நிறைந்ததால் அதன் அனைத்து வான் கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. இதனால் தப்போவ 01 கிராமம் முற்றாக நீருக்குள் மூழ்கியது. அங்கிருந்த 46 குடும்பங்களை பாதுகாப்பாக மீட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனைவிட கம்பஹா மாவட்டத்தில் மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்தது. இதனால் ஜா எல மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் நேற்றும்  வெள்ளத்தில் மூழ்கின. களனி கங்கையின் நீர் மட்டம் குறைந்த போதும்  சிறு வெள்ள அளவில் அதன் நிலமை நீடித்தது.

இந் நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக  35129குடும்பங்களைச் சேர்ந்த 138292 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடகம்) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இவர்களில் வெள்ளம், மண் சரிவு அபாயம் காரணமாக 13199 குடும்பங்களைச் சேர்ந்த 53616 பேரை 231 நலன் புரி நிலையங்களில் தங்கவைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டில் நிலவும் கடும்  மழையுடன் கூடிய காலநிலையினால் 20 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் அம்மாவட்ட மக்களின்  இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சீரற்ற கால நிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை  நேற்று  18 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளிட்ட மூவர்  காணாமல் போயுள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

மழையுடன் கூடிய கால நிலை தொடர்வதால் நில்வள, கிங், களு, களனி, மகாவலி ஆகிய கங்கைகளும், அத்தனகல்ல ஓயா, மா ஓயா, கட்டுபிட்டி ஓயா, ரத்தஒலா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகியனவும் தொடர்ந்து எச்சரிக்கைக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வடைய வாய்ப்புள்ளதால் அந்த ஆறுகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதனைவிட தற்போது அனர்த்த வலயங்களில் இருந்து அறிவுறுத்தல் பிரகாரம் வெளியேறியுள்ளவர்கள் மீள அறிவித்தல் கிடைக்கும் வரை அப்பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் எனவும், மழையுடன் கூடிய கால நிலை தொடர்வதால் பாதுகாப்பை  கருத்தில்கொண்டு  இந்த அறிவிப்பை விடுப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லை தீவு, கண்டி, நுவரெலியா,பதுளை,  கேகாலை, இரத்தினபுரி, காலி, களுத்துறை,குருணாகல், புத்தளம், மொனராகலை, மாத்தறை, அம்பாந்தோட்டை,  வவுனியா, கம்பஹா, மாத்தளை, பொலன்னறுவை, கொழும்பு, யாழ்ப்பாணம் , திருகோணமலை ஆகிய மாவட்டங்களே அடை மழை காரணமாக அனத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

சேதங்கள்:

அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 97 வீடுகள் முற்றாகவும் 3841 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இதனைவிட 97 சிறிய வர்த்தக நிலையங்களும் 241 அடிப்படை கட்டமைப்புக்களும் சேதமடைந்துள்ளன.

இந்த சீரற்ற கால நிலை காரணமாக நேற்று வரை 18 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.  மழையுடன்   ஏற்பட்ட இடி மின்னல் தாக்கம் மற்றும், கடும் காற்றால் மரம் விழுந்தமை, வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டமை மற்றும் மண் சரிவு ஆகியவற்றால் இந்த 18 உயிரிழப்புக்களும் பொலன்னறுவை, மொனராகலை, புத்தளம் – ,  காலி, களுத்துறை, கேகாலை, கொழும்பு, இரத்னபுரி , அனுராதபுரம் மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸாரின் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

கடந்த ஞாயிறு மாலை மாலை 5.00 மணியளவில் பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்த பொலிஸ் பிரிவில் எப்.5 கால்வாய்ப் பகுதியில் வயல் வேளையில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். .

இந் நிலையில் மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். மாதம்பை பகுதியில் நீரில் அடித்து செல்லப்பட்ட மூவரை காப்பாற்றச் சென்ர பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்ப்ட்டு காணாமல் போயுள்ளார்.  ஹெட்டிபொலவில் களுபுலு ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்ததில் 40

வயதான ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.  கம்பஹாவிலும் ஒருவர் அத்தனகல்ல ஓயா வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

மண்சரிவு எச்சரிக்கை:

இந் நிலையில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் கண்டி , மாத்தளை, பதுளை, குருணாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மலைப்பாங்கான பகுதிகள், எச்சரிக்கை வலயங்களில் வசிப்போர் பெரிதும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.