போலீஸ் நிலையத்தில் ஏட்டுக்கு கேக் ஊட்டிய பெண் போலீஸ்- ( வைரல் வீடியோ)

பரமக்குடி : பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் ஏட்டுக்கு கேக் ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தற்போது போலீஸ் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அதில், வெள்ளை சட்டை அணிந்த ஆண் போலீஸ்காரர் ஒருவர் நாற்காலியில் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார்.

அவரது அருகில் நிற்கும் சீருடை அணிந்த பெண் போலீஸ் ஒருவர், அவருக்கு ஆசையுடன் கேக் ஊட்டி விடுகிறார்.

ஆண் போலீசும் சிரித்துக்கொண்டே கேக்கை ருசிக்கிறார். பெண் போலீஸ் கேக் ஊட்டும்போது, ‘நான்.. ஆனந்தை தினமும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன்’’ என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

அப்போது, கையில் இருந்த கேக் தீர்ந்தவுடன், பெண் போலீசின் கையை செல்லமாக கடிப்பதற்கு ஆண் போலீஸ் முயலுகிறார். உடனே விலகிச்செல்லும் அந்த பெண் போலீஸ், அவரது முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டுகிறார்.

அப்போது அருகில் இருந்து ‘‘எதைப் போய் கடிக்கிறீர்கள்? பெரிய … இருப்பீகளோ?’’ என்று ஒரு ஆண் குரல் ஒலிக்கிறது.

இவ்வாறு அந்த வீடியோ முடிகிறது. போலீஸ் ஸ்டேஷனிலேயே இவ்வாறு போலீசார் குதூகலித்துக் கொண்டிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் காவல்நிலையம் என தெரியவந்துள்ளது.

வீடியோவில் வருபவர்கள் அங்கு ஏட்டாக பணியாற்றும் மாரியம்மாள், முத்துப்பாண்டி என்பதும், பெண் போலீஸ் கூறும் ஆனந்த் என்பவர் அங்கு ரைட்டராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்துள்ளது.

பரமக்குடி போலீசார் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏற்கனவே, கடந்த வாரம் பரமக்குடி எஸ்ஐ முனியசாமி, குறி சொல்லும் முதியவரை செருப்பால் அடித்து துவைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

தற்போது பரமக்குடி போலீஸ் குறித்து மேலும் ஒரு சர்ச்சை வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.