தற்போது வடக்கு மாகாணத்தில் தொடரும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மக்கள் இடி மின்னல் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
அதன் பின்னரும் சில மின்னல் தாக்குதல் சாவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா கூறுகின்றார்.
தற்போது வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற மழைவீழ்ச்சி மேற்காவுகைச்சுற்றோட்டத்தின் (Convectional current)விளைவாக கிடைக்கின்ற மழைவீழ்ச்சியாகும். செறிவான மேற்காவுகை மழைவீழ்ச்சி (intensive convectional rainfall)எப்போதும் இடிமின்னலுடன் தொடர்புடையது. மேற்காவுகைச் செயற்பாட்டின்போது உருவாகின்ற கார்திரள்(Cumulo-Nimbus) முகில்களுக்கிடையிலான மின்னேற்றமே இடிமின்னலுக்கான அடிப்படையாகும். இடிமின்னல் இரண்டு வகைப்பட்டதாகும்.
1. இரண்டு முகில்களுக்கிடையிலான கிடையான(Horizontal) மின்னேற்றம்.
2. பூமியின் மேற்பரப்புக்கும் முகில்களுக்கும் இடையிலான குத்தான(Vertical) மின்னேற்றம்.
இதில் குத்தான மின்னேற்றமே எமக்கு உயிர்,உடல் மற்றும் சொத்துப்பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
இதில் உயிர் மற்றும் உடல் பாதிப்புக்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பான சில ஆலோசனைகள் தரப்படுகின்றன.
1.ஏப்ரல், மே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செறிவான மழைவீழ்ச்சி(20மி.மீ.) தொடங்கும்போதே அடுத்து இடிமின்னல் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனுமானித்து பாதுகாப்பிடத்துக்கு நகர்தல்.
2. பரந்த மற்றும் வெட்டைவெளிகளில் நிற்பதனை தவிர்த்தல்
3. திறந்த வெளிகளில் திறந்த வாகனப்(சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்) போக்குவரத்தை தவிர்த்தல்
4. தொலைபேசி மற்றும் மின்சாதனப் பயன்பாட்டை தவிர்த்தல்.
5. மரங்களுக்கு அண்மையில் அல்லது கீழே நிற்பதனை தவிர்த்தல்
6. விவசாயிகள் விவசாய உபகரணங்களை பாவிக்காதிருத்தல்.
7. ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடிமின்னல் நிகழ்வுகள் இடம்பெறுமாயின்..
தாடையைத் தொடர்ந்து அசைத்துக்கொண்டிருத்தல் செவிப்பறை பாதிப்பை தடுக்கும்.(இதனால் தான் எமது முன்னோர் இடிமின்னலின் போது அர்ஜூனனுக்கு அபயம் என கூறவேண்டும் என தெரிவித்தனர்)
இயன்றவரை கால் பாதத்தின் குதிப்பகுதி நிலத்தின் மீது படுவதனை தவிர்த்து காதுகளை மூடி நிலத்தில் இருத்தல்.
8. வீட்டில் நின்றாலும் சமையலறைப் பகுதியில் நிற்பதனை தவிர்த்தல்.






