அரசாங்க காணிகள் மோசடியாக விற்பனை!

அரசாங்கத்துக்குரிய வனப்பகுதியொன்றை அரசர் காலத்தில் தமது குடும்பத்தினருக்கு பரிசாக கிடைத்த காணி என்று கூறி மோசடியாக விற்பனை செய்த சம்பவமொன்று அநுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் ஹொரொவப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனாந்திரமொன்றின் 9998 ஏக்கர் காணி இவ்வாறு மோசடியான முறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் முன்னைய அரசர் காலமொன்றில் தங்கள் குடும்பத்தினருக்கு பரிசாக கிடைத்த காணிப் பரப்பு ஒன்று உள்ளடங்கியுள்ளதாக தெரிவித்து அதற்கான போலி காணி உறுதிகள் மற்றும் அளவை வரைபடங்களை தயாரித்து நபரொருவர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார்.

அவரிடம் அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் மற்றும் வர்த்தகர்கள் என்று ஏராளமானோர் ஏமாந்து தங்கள் பெருந்தொகைப் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவல்களையடுத்து குறித்த காணி விற்பனை மோசடி தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் வனப்பாதுகாப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.