கிளிநொச்சி பொது சன நூலகம் அமைப்பதற்கான காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என கட்டளை தளபதி நஜீவ தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபையில் கடந்த மாத அமர்வு நடை பெற்ற போது கிளிநொச்சியில் பொது சன நூலகத்தை அமைப்பதற்கு ஏதுவாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த நூலக காணியை விடுவிப்பதற்கு கோரும் பிரேரணை தவிசாளர் அ.வேழமாலிகிதனால் முன்வைக்கப்பட்டது.
இத் தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குறித்த நூலக காணியை விடுவிக்குமாறு கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இன்று கரைச்சி பிரதேச சபைக்கு வருகை தந்த கட்டளை தளபதி நஜீவ, பொது சன நூலக காணியில் ஒரு பகுதியை பிரதேச சபைக்கு கொடுப்பதில் தமக்கு ஆட்சேபனை
இல்லை எனவும் ஏனைய சிறு பகுதியினை தலைமை பீடத்துடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தவிசாளரையும் மற்றும் செயலாளரையும் குறித்த நூலக காணிக்கு வரவழைத்து பிரதேச சபை உடன் பொறுப்பேற்க கூடிய காணிகளின் எல்லைகளை நேரில் காண்பித்தார்.
இதேவேளை, தவிசாளரினால் கோரப்பட்ட கிளிநொச்சி அருள் மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவத்தின் போது தேர் வீதி வலம் வருவதற்கு குறித்த தேர் ஓடும் வீதியை திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் பார்வையிட்ட இராணுவ தளபதி அரசாங்க அதிபருக்கு தகவலை வழங்கிவிட்டு வீதியை திறந்து தேர் ஓட விட முடியும் என்று கூறியதுடன் சுவாமி வீதி வலம் வருவதற்கு இராணுவம் தடையாக நிற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.






