ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் இந்திய வம்சாவளி நபருக்கு சந்திரனில் 10 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் அஜ்மான் பகுதியில் குடியிருந்து வருபவர் மணிகண்டன் மேலோத். இவருக்கே சந்திரனில் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அதற்கான ஆதாரங்களையும் பாதுகாத்து வருகிறார் மணிகண்டன்.
சந்திரனில் உள்ள இவரது நிலத்திற்கு ‘Area F-4, Quadrant Charlie’ என பெயரிடப்பட்டுள்ளது.
மணிகண்டனின் தொழில்முறை நண்பர் ஒருவர் நிலவில் நிலம் வாங்குவது தொடர்பில் ஒருமுறை இவருடன் விவாதித்துள்ளார்.
ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் இவரும் அதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
குறித்த விவாதம் நடந்த சில வாரங்களில் அந்த நண்பரின் உதவியுடன் மணிகண்டன் நிலவின் ஒருபகுதிக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
சந்திரனில் நிலம் வாங்குவது சாத்தியமா? இது தொடர்பாக செயல்பட்டுவரும் இணையதளம் ஒன்று சாத்தியமே என பதிலளிக்கின்றது.
1980 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் முன் அனுமதியுடன் அமெரிக்க குடிமகன் ஒருவர் குறித்த முயற்சிக்கு துவக்கம் வைத்தார்.
அவரது முயற்சியின் முடிவில் அதே ஆண்டு முதல் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களையும் சேர்க்கத்துவங்கினர்.
தற்போது அந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 6,011,311 பேர் உள்ளனர்.
இந்த இணையதளத்தின் வாயிலாக குறித்த அமெரிக்க நாட்டவர் சந்திரனில் உள்ள சுமார் 611 மில்லியன் ஏக்கர் நிலத்தை உலகமெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் இருந்து 325 ஏக்கர் நிலம் இதுவரை விற்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஒரு ஏக்கர் நிலம் என்பது 4,047 சதுர மீட்டர் ஆகும். ஒரு ஏக்கருக்கான கட்டணம் 37.50 டொலர்.
சந்திரனில் மணிகண்டனுக்கு மட்டுமல்ல, ஜார்ஜ் H.W. புஷ், ஜிம்மி கார்ட்டர், டாம் குரூஸ், ஜான் ட்ரவோல்டா மற்றும் நிக்கோல் கிட்மேன் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.