பொலிஸாரை குழப்பமடைய செய்த பசு!

அக்குரஸ்ஸ தலஹகம கிராமத்தில் ஒரே ஊரில் ஒரே பெயரைக் கொண்ட இரண்டு பேர் தங்களது பசு மாடுகளையும் கன்றுகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் ஒரே நாளில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு காரணமாக அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

அண்மையில் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு சென்ற விமலசேன விக்ரமரட்ன என்ற நபர், கர்ப்பமான பசுமாட்டைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதே நாளில் விமலசேன விக்ரமரட்ன என்ற பெயரை உடைய மற்றுமொரு நபர் தனது பசுமாட்டையும் கன்றையும் காணவில்லை என அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, அலுத்கம பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான லொறியொன்றை சோதனையிட்ட போது அதில் பசு மாடுகளும் கன்றும் சட்டவிரோதமாக கொண்டு சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் செய்த விசாரணையின் போது இந்த மாடுகளை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து களவாடியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை அலுத்கம பொலிஸார் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.