இன்னும் மூன்று நாள் மட்டும் பொறுங்கள்: டிரம்ப்

வடகொரியா ஜனாதிபதியான கிம் ஜாங் உன் தன் நாட்டின் அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளை மிரட்டி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்காவிற்கு வடகொரியா பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்தது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

அதன் பின் வடகொரியா ஜனாதிபதி தன்னுடைய போக்கை முற்றிலும் மாற்றிக் கொண்டார்.

இனி நாங்கள் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளமாட்டோம். நீண்ட காலமாக பகைநாடுகளாக இருந்த தென்கொரியாவுடன் நேரடியாக பேச்சு வார்த்தை என அடுத்தடுத்து சில அதிரடி முடிவுகளை கிம் எடுத்து வருகிறார்.

தென் கொரியா சந்திப்பு முன்பே, கிம் அமெரிக்க ஜனாதிபதியான டிரம்பை சந்திப்பு பேச விரும்புவதாக கூறினார். இதனால் இரு நாட்டு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் சந்திப்பும் சிங்கப்பூரில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், டிரம்ப் இன்று கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.