ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் எதிர் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்ட 40 ஆவது லீக் போட்டியில் பாட்டியின் உயிரிழப்பு சோகத்திலும் வீரர் ஒருவர் விளையாடிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடந்த குறித்த போட்டியில் 159 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் அணியிடம் 143 ஓட்டங்களை மட்டுமே பெற்று பஞ்சாப் தோல்வியடைந்தது.
எனினும், பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் அவுஸ்ரேலிய வீரரான என்ட்ரூ டை சிறப்பாக பந்து வீசி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கும் அவர் உரித்தானதோடு ஊதா நிறத் தொப்பியையும் பெற்றுக்கொண்டார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில் “இன்று என் பாட்டி இறந்துவிட்டார். எனது சிறப்பான ஆட்டத்தினை அவருக்காக அர்ப்பணிக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நாள் எனக்கு மிகக் கடினமான நாள் அதே போன்று இன்று உணர்ச்சிகரமான போட்டியில் விளையாடியுள்ளேன் எனவும் என்ட்ரூ டை தெரிவித்துள்ளார்.
போட்டியின் போது ஒவ்வோர் விக்கெட்டை வீழ்த்திய சந்தர்ப்பத்திலும் என்ட்ரூ டை தனது ஜேர்சியில் எழுதியிருந்த “கிரேண்ட் மதர்” என்ற சொல்லிற்கு முத்தம் கொடுத்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.அவரின் இந்தச் செயற்பாட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதோடு, அவரின் பாட்டியின் மரணத்திற்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.