இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணை அங்குள்ள ஊழியரே பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் குடியிருந்து வந்துள்ளார் 35 வயதான குறித்த பெண்மணி.
இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கணவரால் மிகவும் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார் குறித்த பெண்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் தமது கணவர் தாக்கியதாக கூறி சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
முதற்கட்ட சிகிச்சை முடிந்து இரவு 9 மணியளவில் விருந்தினர் காத்திருக்கும் பகுதியில் குறித்த பெண் சான்றிதழுக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அவரை அணுகிய நபர் ஒருவர், பரிசோதனை ஒன்று எஞ்சியிருப்பதாகவும், மருத்துவர் பரிந்துரைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய குறித்த பெண், அவர் அழைத்து சென்ற முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
அங்கே வலுக்கட்டாயமாக அவருடன் உறவு கொண்டுள்ளார். மட்டுமின்றி நடந்த சம்பவத்தை வெளியிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த குறித்த பெண் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், மருத்துவமனை ஊழியரான நாகராஜு என்பவரை கைது செய்துள்ளனர்..
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






