இந்தியாவில் ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருப்பதாகவும் பெயரளவிலான ஜனாதிபதியாக இருந்தாலும் மாநிலங்கள் சம்பந்தமான சகல அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே இருப்பதாகவும் அவரால் மாகாணங்கள் சம்பந்தமான முடிவுகளை எடுக்க முடியும் எனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய இலங்கையின் அரசியலமைப்புச்சட்டத்தையும் உருவாக்க முடியும். பெயரளவிலான ஜனாதிபதி இந்த அதிகாரங்களை வழங்க முடியும். தேவையான அதிகாரங்களை வழங்கலாமே அன்றி நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது தவறானது எனவும் அவர் கூறியுள்ளார்.
குமார் வெல்கம வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். நான் ஆரம்பத்தில் இருந்தே நிறைவேற்று அதிகாரத்தை எதிர்த்து வருகின்றேன்.
ஜே.ஆர். ஜெயவர்தன இந்த பதவியை கொண்டு வந்த காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகின்றோம். அவர் சில சந்தர்ப்பங்களில் எப்படி அதிகாரத்தை பயன்படுத்தினார் என்பதை நாங்கள் கண்டோம். எங்களது ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறியே பதவிக்கு வந்தனர்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறி பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ச மாத்திரமல்ல, சந்திரிக்கா அதனை செய்யவில்லை. மைத்திரிபால சிறிசேனவும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறியது மட்டுமல்ல, மாதுளுவாவே சோபித தேரரின் உடலுக்கு எதிரிலும் அடுத்த சில மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறினார். எனினும் அதனை அவர் செய்யவில்லை.
நிறைவேற்று அதிகாரம் நாட்டுக்கு பொறுத்தமானதல்ல என்றே நான் கருதுகிறேன் எனவும் குமார் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.