நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள்’- ரஜினி, கமலை வசைபாடிய அரசுக் கொறடா

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள்… டி.டி.வி, கமல், ரஜினி. இவர்கள் மூவரால் தமிழ்நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது’ எனக் கடுமையாக விமர்சனம்செய்தார் அரசுக் கொறடா.

அரசு கொறடா

அரியலூரில் அ.தி.மு.க தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தமிழக அரசின் தலைமைக் கொறடா தாமரை.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், “தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் நமக்குள்ளே  ஏதாவது ஒரு பிளவை ஏற்படுத்தி, குறுக்குவழியில் ஆட்சிக்கு வரும்.

அப்படி ஆட்சிக்கு வந்த போதெல்லாம், இருண்ட காலமாகவே இருந்தது. மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஒருநாளும் நன்மை செய்தது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ தவறுசெய்துவிட்டோம்.

நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து தேர்தலைச் சந்திப்போம் என வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளோட்ட  மாகத்தேர்தலைச் சந்தித்தார்கள்.

அந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு என்ன நேர்ந்தது. டெபாசிட்டை இழக்கும் நிலைமையை மக்கள் அளித்தார்கள். டி.டி.வி.தினகரன், நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி ஒரு இயக்கத்தைத் தொடங்கி, தமிழகத்திலே வலம் வந்துகொண்டிருக்கிறார்.

குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க-வினர், அ.தி.மு.க-வுடனேயே நீண்ட நெடிய பயணம் செய்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.

தமிழகத்தில் எத்தனையோ இயக்கங்கள் அடையாளம் தெரியாமல் போயிருக்கின்றன. கமல், ரஜினியெல்லாம் சொல்லிக்கொள்கிறார்களே தவிர, அவர்களைத் தற்போது டி.வி-யில் பார்ப்பதுகூட மிகவும் அரிதாக உள்ளது. ஒரு இயக்கம், மக்களிடத்திலும், மக்களின் எண்ணங்களிலும் வேரூன்ற வேண்டும்.

மக்களிடத்திலே உயிரூட்டம் பெற வேண்டும். அப்போதுதான் அவை வாக்குகளாக மாறி ஆட்சிக் கட்டிலிலே அமரும். தன் ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடித்துவிட்டு, வயது முதிர்வின் காரணமாக  ஏதாவது   நாட்டு மக்களை ஏமாற்ற முடியுமா என்று எத்தனையோ இயக்கங்கள் வலம் வந்து தோற்றுப்போய், இந்த அரசியலே வேண்டாம் என ஓடி ஒளிந்துபோயிருக்கின்ற நேரத்தில், நேற்று முளைத்த காளான்களெல்லாம் அ.தி.மு.க ஆட்சியைப் பார்த்து, ‘இது ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கின்ற ஆட்சி. சட்டமன்றத்திலே, எனக்குப் பின்னால் அ.தி.மு.க-வின் ஆட்சி நூறாண்டுக் காலம் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலிலே இருக்கும் என ஜெயலலிதா சொன்னார்.

எனவே, அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதாவின் வார்த்தைகளை நனவாக்க இந்த மே தினத்தில் சபதம் ஏற்போம்’ என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., இராம.ஜெயலிங்கம் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.