அவளுக்கு வாழ தகுதியில்லை: கணவரின் கடிதம்

கேரளாவில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த கணவர் இன்னும் தலைமறைமாக உள்ள நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

திருச்சூரை சேர்ந்தவர் விராஜ். இவர் மனைவி ஜீது (24). கணவன் மனைவியிடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த பின்னர் கடந்த ஒரு மாதமாக தனித்தனியாக வசித்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை Chengaloor-ல் உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடும் அலுவலகத்துக்கு ஜீது தனது அப்பா ஜனார்த்தனனுடன் வந்துள்ளார்.

அலுவலகத்திலிருந்து ஜீது வெளியில் வந்த நிலையில் அங்கு பெட்ரோலுடன் வந்த அவர் கணவர் விராஜ் மனைவி மீது அதை ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.

ஏற்கனவே மனைவியை கொல்லும் திட்டத்தோடு இதை விராஜ் செய்தார் என தெரியவந்துள்ள நிலையில் ஜீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து விராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

அதில், ஜீது விராஜை ஏமாற்றினார் என எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பெரும் கடன் சுமையை ஜீது ஏற்படுத்தியதாகவும், தான் இந்த உலகை விட்டு செல்வதாகவும் அதே போல ஜீதுவுக்கும் வாழ தகுதியில்லை எனவும் எழுதப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், ஜீதுவை வேறு ஆணுடன் விராஜ் சேர்ந்து பார்த்ததிலிருந்து அவர்களுக்குள் உறவுமுறை நன்றாக இல்லை.

இது ஒரு மாதத்துக்கு முன்னர் நடந்தது, அப்போது காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து இருவரிடமும் பேசினோம். அப்போது மனம் ஒத்து விவாகரத்து பெற இருவரும் முடிவெடுத்தார்கள்.

ஆனால் அப்போதே ஜீதுவை கொல்ல விராஜ் திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது என கூறியுள்ளனர்.