இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஹட்டன் – டிக்கோயா, தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது 24 வீடுகள் கொண்ட தொடர் லய குடியிருப்பிலுள்ள 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏனைய குடியிருப்புக்களில் சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது;
அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு உணர்ப்பட்டது. இதன்பின்பே வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் உடைந்தன.இதன்போது பாதிக்கப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் 40 வயதான சிவானந்தன் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், நில அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






