“இது ஏலியன்கள் வந்த பறக்கும் தட்டோட பாகம்டோய்!” – வானில் இருந்து விழந்த மர்மப் பொருள்!

கரூர் மாவட்டத்தில், இன்று அதிகாலை வானத்திலிருந்து இரும்புத்துண்டு போன்ற ஒரு பொருள் பூமியில் விழவே, “இது ஏலியன்கள் பூமிக்கு வந்த பறக்கும் தட்டோட பாகம்டோய்” என்று சிலர் கிளப்பிவிட, அந்தப் பகுதியில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது வேட்டமங்கலம். இந்த ஊராட்சியில் உள்ள சேமங்கி என்ற கிராமத்தில், இன்று அதிகாலை சிலர் வயலுக்குப் போயிருக்கிறார்கள். அப்போது, வானத்திலிருந்து ஒரு பொருள் வந்து அவர்களுக்கு முன்னே விழ, அதிர்ந்துபோயிருக்கிறார்கள். பயத்தோடு அதை அவர்கள் பார்க்க, ஒரு வளைந்த இரும்புத்துண்டு போல அந்தப் பொருள் இருந்துள்ளது. இருந்தாலும், அதைத் தொடப் பயந்த அவர்கள், விடிந்ததும் ஊர் மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால்,சேமங்கியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அந்த மர்மப் பொருளைப் பார்க்க மக்கள் அங்கே குவிந்தார்கள். அங்கிருந்த சிலர், தூரத்திலிருந்தே அந்தப் பொருளை பார்த்துவிட்டு, ஒருவித அனுமானத்துக்கு வந்தவர்களாக, “இது ஏலியன்கள் பயணிக்கும் பறக்கும் தட்டுகளோட பாகம்டோய்..!” என்று கிளப்பிவிட, அனைவருக்கும் பீதி ஏற்பட்டது. ஆனால் இன்னும் சிலரோ, “இது ஏலியன்கள் பயன்படுத்தும் பறக்கும் தட்டோட பாகமும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை. வானத்துல போன ஏரோப்பிளேன் இல்லைனா, ஜெட் விமானத்தோட ஏதோ ஒரு பாகத்தின் சிறு துண்டா இருக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டு அடங்காத ‘ஏலியன்கள் புகழ்’ பார்ட்டிகள், “இன்னைக்கு அதிகாலை நம்ம ஊரைக் கடந்து, வானத்துல விமானமோ ஹெலிகாப்டரோ எந்த ஊர்தியும் போகலை. அப்புறம் எப்படி இந்தப் பொருள் விழுந்திருக்கும். இது, கண்டிப்பாக பறக்கும் தட்டோட பாகம்தான்” என்று லாஜிக்காகப் பேச, `எதா இருந்தா நமக்கென்ன. இந்தப் பொருளால நமக்கு எந்தப் பாதிப்பும் வரலை. இது என்ன பொருள்னு கண்டுபிடிக்க, வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம்’ என்றார்கள் சிலர்.