கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட அனர்த்தம்! கடலில் மூழ்கும் ஒரு தீவு

இலங்கைக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ள காரணத்தினாலேயே கடல் கொந்தளிப்பு மற்றும் உயரமான அலைகள் தோன்றுகின்றன.

இது நாளை வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாழமுக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பல பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வந்ததுடன், மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கடல் நீர் நிலப்பகுதிக்கு வருவதால் இலங்கையில் காணப்படும் ஒரு தீவுப்பகுதிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ, கற்பிட்டியில் அமைந்துள்ள “முத்துபந்திய” என்ற தீவே அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

முத்துபந்திய தீவு இலங்கையில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள் இந்த தீவில் வசிக்கின்றனர்.

முத்துபந்திய தீவைச் சுற்றி ஏற்படும் கடலரிப்பு காரணமாக இந்த தீவு அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் கொந்தளிப்பு மற்றும் உயரமான அலைகள் தோன்றுவதால் இந்த தீவு மேலும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இலங்கையின் பிரதான பகுதியில் இருந்து முத்துபந்திய தீவின் ஒரு பகுதி துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.