‘கண்ணுங்களா… டீம் பிரிச்சுக்குவோமா..?!’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்

பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் பேசிய செல்போன் ஆடியோவைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் சாட்டிங் இந்த வழக்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரத்தில், புற்றீசல்போல தோண்டத் தோண்ட புதுப்புது தகவல்கள் தினமும் வெளியாகிவருகின்றன.

மாணவிகளிடம் செல்போனில் பேசும் நிர்மலா தேவியின் உரையாடலைத் தொடர்ந்து, அவர் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த தகவலும் வெளியாகிக் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் நிர்மலா தேவிக்கு எதிரான ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸார் சமர்பிக்க உள்ளனர்.

இதற்கிடையே, அருப்புக்கோட்டை நகர போலீஸாரிடமிருந்த நிர்மலா தேவியின் வழக்கு, சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி.,முத்து சங்கரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க, ஏழு டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அவை, இன்று முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில், நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் சாட்டிங்கைப் பார்த்து  போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க, நிர்மலா தேவியை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நிர்மலா தேவியின் போன் உரையாடல், வாட்ஸ்அப் சாட்டிங் ஆகியவைகுறித்து அவரிடம் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம்.

சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிகளுடன் நிர்மலா தேவி மார்ச் முதல் வாரத்தில் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதில், ‘பிஎன் மேடம் 2’ என்று  நிர்மலா தேவியின் பெயரை மாணவி ஒருவர் தன்னுடைய செல்போனில் பதிவுசெய்துள்ளார்.

அதில் பல தகவல்கள் இருந்தாலும், வழக்குத் தேவையானவற்றை மட்டும் நாங்கள் சேகரித்துள்ளோம்.

”கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா” என்று ஆரம்பிக்கிறது அந்த வாட்ஸ்அப் சாட்டிங். அதற்கு மாணவி, ”மேடம் வெளியில் போகும்போதுகூட நீங்கள் வாரீங்களா, அமைதியா சாதிப்போம்” என்று பதில் சொல்கிறார்.  அதன்பிறகு நடக்கும் உரையாடல்கள்தான். இந்த வழக்குக்கு முக்கிய ஆவணமாக உள்ளது.

”வெற்றிக்கு திறமை மட்டும் போதாது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்திச்சாலித்தனமாக செயல்பட வேண்டும்.

நான் சொல்வது உங்களுக்குப் புரிந்தால், குட் மார்னிங் என்று ஆங்கிலத்தில் கேப்பிட்டலில் எனக்கு மெஸேஜ் அனுப்பவும்.

படிப்பிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு நான் வழிகாட்டுவேன்” என்று நிர்மலா தேவி உரையாடுகிறார்.

அதோடு, ”வாட்ஸ்அப்பில் டி.பி-யில் உங்களின் அழகான புகைப்படங்களை வையுங்கள்” என்றும் கூறுகிறார். இதற்கு மாணவிகள், எதிர்த்து பதிலளித்துள்ளனர்.

மேலும், ”அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம்” என்றும் நிர்மலா தேவி குறிப்பிடுகிறார்.

மாணவிகளுக்கும் நிர்மலா தேவிக்கும் நடந்த இந்த வாட்ஸ்அப் சாட்டிங்கில், பேராசிரியையின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு எதிர்ப்பைக் காட்டிய மாணவிகளிடம், ”இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்” என்றும் அட்வைஸ் செய்துள்ளார்.

கடைசியாக, ”யோசி… யோசி” என்று மீண்டும் மாணவிகளிடம் சொல்கிறார். இதுபோல பல வாட்ஸ்அப் உரையாடல்கள் எங்களிடம் உள்ளன.

அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்த உள்ளோம். கல்லூரி நிர்வாகத்திடமும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடமும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ‘கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா’ என்று நிர்மலா தேவி வாட்ஸ் அப்பில் சொல்லியிருப்பதால், அந்த டீம் குறித்தும் விசாரிக்கப்படும்” என்றார்.

இதற்கிடையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் கூறுகையில், “நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பேசியதாக வெளியான ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்” என்றார்.