பேஸ்புக் நிர்வாகிக்கு இலங்கையைச் சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் பகிரங்க கடிதம்!

இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன.

இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்தவேண்டும். சமூக தராதரங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

மதங்களுக்கிடையில் குரோதங்களை பரப்புவதற்கும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளிற்காகவும் பேஸ்புக் இலங்கையில் பயன்படுத்தப்படுவது குறித்து தங்கள் அமைப்பு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது என மாற்றுக்கொள்கை நிலையத்தை சேர்ந்த ரைசா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் இனக்குரோதங்களையும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளையும் தூண்டும்  பதிவுகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முஸ்லிம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்யவேண்டும் என தெரிவிக்கும் பதிவொன்று சிங்களத்தில் முகப்புத்தகத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இனக்குரோதம் தொடர்பில் ஆராய்ச்சிசெய்து அது குறித்த அறிக்கையை பேஸ்புக்கிற்கு அனுப்பிவைத்தோம் ஆனால் உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனக்குரோதம் மற்றும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் வெளியாகியுள்ளது குறித்து நாங்கள் சுட்டிக்காட்டும்போது பேஸ்புக்தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை இது குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.