பெண்ணுடன் இணையத்தில் சாட்டிங் செய்து டேட்டிங்குக்கு ஆசைப்பட்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.60 லட்சத்தை இழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் டேட்டிங் இணையதளங்களில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் பெண் ஒருவர் இணையம் வழியாக குறித்த தொழிலதிபரை தொடர்பு கொண்டுள்ளார். கொல்கத்தா நகரைச் சேர்ந்தவர் எனவும் பெயர் அர்பிதா எனவும் இவரிடம் அவர் அறிமுகமாகியுள்ளார்.
இவர்களுக்கு இடையிலான முதல் சாட்டிங்கில் இருவரும் ஒருவொருக்கு ஒருவர் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் வாட்ஸ்அப், பேஸ்புக் முகவரியை அளித்து புகைப்படங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள், தமது தந்தைக்கு உடல் நலம் குன்றியுள்ளதாகவும், மருத்துவ செலவுக்கு 30 ஆயிரம் தேவை, உதவ முடியுமா என தொலைபேசியில் கேட்டுள்ளார்.
மனம் இளகிய தொழிலதிபர், உடனடியாக ரூ.30 ஆயிரத்தை அர்பிதா கூறிய வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.
இதேபோல, 2017, டிசம்பர் 15 முதல் 2018, ஜனவரி 23 வரை பலமுறை குறித்த தொழிலதிபர் பல லட்சங்களை அர்பிதா கூறிய வங்கிக்கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல அர்பிதா குறித்த தொழிலதிபருடன் பேசுவதைக் குறைத்துள்ளார். திடீரென்று அவரின் செல்போன், வாட்ஸ்அப் எண் அனைத்தும் செயல்பாட்டில் இருந்து முடக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர், அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு சைபர்கிரைம் பொலிசாரிடம் அர்பிதா குறித்தும், தான் பணம் பரிமாற்றம் செய்த வங்கிக்கணக்கு விவரங்களை அளித்து குறித்த தொழிலதிபர் புகார் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






