வட மாகாண ஆளுநரை தடுத்த இரகசியம் கசிந்தது?

புதிய ஆளுநர் நியமனங்கள் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக மேல் மாகாண நியமனமும், வடக்கு மாகாணத்திற்கு நியமனம் இடம்பெறாமையும் சில, பல குழப்பங்களை உருவாக்கியிருப்பதை அறிய முடிந்தது.

1988 ஜுனில் மாகாண சபை முறைமை நடைமுறைக்கு வந்த காலம் முதல் தலைநகர் கொழும்பையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்திற்கு சிறுபான்மையினரான தமிழரோ, முஸ்லிமோ தான் அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்டு வருகின்றனமை வழமை.

தலைநகர்ப் பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நலனைக் கவனிக்க என்ற ஏற்பாட்டுடன் இது ஒரு வழக்காறாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.

மேல் மாகாண ஆளுநராக 1988 முதல் 1994 வரை ஆறு ஆண்டுகள் முன்னாள் பிரதம நீதியரசர் சுப்பையா சர்வானந்தா. 1999 ஜுலை முதல் டிசெம்பர் வரை ஆறு மாதங்களுக்கு தற்போதைய அமைச்சரான டி.எம்.சுவாமிநாதன். 1995 ஜனவரி முதல் 2000 ஜனவரி வரை ஐந்து வருடங்களுக்கு கே.விக்னராஜா.

2000 முதல் 2002 பெப்ரவரி வரை இரு ஆண்டுகளுக்கு பத்மநாதன் இராமநாதன். 2002 பெப்ரவரி முதல் 2015 ஜனவரி வரை 13 ஆண்டுகளுக்கு அலவி மௌலானா. 2015 ஜனவரி முதல் நேற்று வரை சுமார் மூன்றரை ஆண்டுகள் ஓய்வு பெற்ற மூத்த சிவில் சேவை அதிகாரியான கே.சி.லோகேஸ்வரன்.

ஆனால் இப்பொழுதுதான் முதல் தடவையாக பெரும்பான்மை இனத்தவரான ஹேமகுமார நாணயகார மேற்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேசமயம் வடக்கு மாகாணத்திற்குள் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.சி.லோகேஸ்வரன் திடீரென வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கமிக்கப்பட்டிருக்கிறார்.

வடக்கு மாகாண சபைக்கு இன்னும் ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதற்கு பின்னால் புதைந்துள்ள விடயங்களை அறிவதற்கு ‘பிளாஸ் பாக்’ பார்க்க வேண்டியுள்ளது.

2015 ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஸ சாம்ராஜ்ஜியம் கவிழ்ந்து கொட்டுண்டது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். அதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக்கப்பட்டார்.

புதிய ஆட்சிப்பீடம் உருவானதும் பழைய ஆட்சிப் பீடத்தினால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கை வழமை போல கட்டவிழ்ந்தது!

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிப் பீடத்தை கவிழ்ப்பதற்காகச் சிறுபான்மையினரான தமிழர்களை ஒன்று திரட்டி மைத்திரிபால சிறிசேனவிற்கு பலமூட்டிய வெற்றிவீரனாக இருந்தார் சுமந்திரன். பிரதமர் ரணிலிடம் இருந்து அவருக்கு அச்சமயம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

‘சுமா… மேல் மாகாண சபைக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஒரு தமிழரின் பெயரைச் சிபாரிசு செய்யுங்கள்!’ என்றார் பிரதமர்.

சுமந்திரனின் மனதில் ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியான கே.சி.லோகேஸ்வரனின் பெயர் இருந்தது போலும், எடுத்த எடுப்பிலேயே அவரின் பெயரை பரிந்துரைத்தார் சுமந்திரன்.

‘அப்படியானால் லோகேஸ்வரனுக்கே அந்த நியமனத்தை கொடுப்போமா?’ என்று கேட்டார் பிரதமர் ரணில்.

கொஞ்சம் பொறுங்கள் சம்பந்தன் ஐயாவிடம் கேட்டு சொல்கிறேன். என்றார் சுமந்திரன். அவரும் பச்சைக்கொடி காட்ட, பச்சைக் கட்சித் தலைவருக்கு செய்தி பறந்தது.

சரியாக ஒரு மணி நேரத்தில் லேஸகேஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று. அது பழைய சம்பவம்.

கடந்த 7ஆம் திகதி சகல மாகாண ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தமையும், மாகாண ஆளுநர்களின் இடம்மாற்றம் பற்றி அவர் பேசியமையும், அதையடுத்து லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் எனச் செய்திகள் வெளியானமையும் தெரிந்தவையே.

வடக்கு மாகாண ஆளுநராகப் பணியாற்றவே கே.சி.லோகேஸ்வரன் விரும்பினர். கூட்டமைப்பும் அதையே விரும்பியது.

ஆனால் அப்பகுதிக்கு அவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே விரும்பினார் எனக் கூறப்படுகிறது. அது பற்றிய தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பிற்குத் தெரியப்படுத்த கூட்டமைப்பு அதனை ஆட்சேபித்ததாக ஒரு தகவல்.

அதனால் அந்த நியமனம் நடக்கவில்லை. அதற்கிடையில் லோகேஸ்வரனுக்கு வடமேல் மாகாண நியமனத்தை ஜனாதிபதி வழங்கினார். வேறு வழியின்றி, எதிர்ப்பு ஏதும் காட்டாமல் லோகேஸ்வரன் அதனை ஏற்றுக் கொண்டார்.

எனினும், இந்த விடயம் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் பற்றி தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசுவதாக ஜனாதிபதி கூறினாராம். இந்த தகவல் தெரியவந்தமையை அடுத்து, சுமந்திரன் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் பேசினார் என நம்பகரமாக அறிய வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநராக ஒரு தமிழர் நியமனமாவார் என்ற செய்தியால் தமிழ் மக்கள் மகிழ்ந்திருந்தனர்.

‘லோகேஸ்வரன் பொருத்தனமானவர். கட்சி ஏதும் சார்ந்தவரல்லார். மூன்று வருடங்களாக மேல் மாகாணத்தில் பக்கச் சார்பற்று, திறமையாக பணி புரிந்துள்ளார். அவரையே வடக்கிற்கு நியமியுங்கள்!’ என்று சுமந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார்.

‘பார்ப்போம் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி எனது கருத்தைக் கேட்டால் இதனை நான் சொல்வேன்’ என்று சமந்திரனுக்கு உறுதியளிக்கிறார் பிரதமர் ரணில்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவி இன்னும் நிரப்பப்படாமையினால் அப்பதவிக்கு லோகேஸ்வரன் நியமிக்கப்படலாம் என்று கூட்டமைப்புத் தலைமை நேற்றிரவு வரை நம்பிக் கொண்டிருக்கின்றமையை அறிய முடிந்தது.

ஆனால் அதில் ஆப்பு விழுந்த மாதிரி ஒரு செய்தி நேற்றிரவு இப்பத்தி எழுதும் போது கிடைத்தது.

நேற்று முன்னிரவில் இது வரை வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் குரேக்கு ஜனாதிபதி ஓர் அழைப்பு எடுத்தாராம். ‘ரெஜினோல்ட், உங்களைத்தான் திரும்பவும் வடக்குக்கு அனுப்ப வேண்டும் போன்ற நிலைமை உள்ளதே!’ என்றாராம் ஜனாதிபதி.

‘அதற்கென்ன? மகிழ்வோடு ஏற்பேன்’ என்று பதிலளித்தாராம் குரே. எது எப்படியோ வடக்கு மாகாண ஆளுநர் பதவியும் கூட திடுக், திடுக் திருப்பங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது போலும் என தகவல்கள் கசிந்துள்ளன.