வாகனச்சோதனையில் திருட்டு பைக்குடன் சிக்கிய கொள்ளையன்!

திருச்சியில், இருசக்கர வாகனங்களைத்  திருடிய கொள்ளையனை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

திருச்சி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் திருடர்களைப் பிடிக்க, மாநகர போலீஸார் தீவிரம்காட்டிவருகின்றனர்.  இதற்காக,  திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தனிப்படை அமைத்துள்ளார். இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் காஜா கடை சந்து பகுதியைச் சேர்ந்தவர், சையது அபுதாகீர். இவரது மகன் ஜமால் முகமது என்பவர், கடந்த 5-ம் தேதி இரவு 11 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தைத் தன் வீட்டின் முன்பாக நிறுத்திப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அடுத்தநாள் காலை வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஜமால் முகமது புகார் அளித்தார்.

அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த காந்தி மார்க்கெட் போலீஸார், கடந்த 7-ம் தேதி காலை 10.15 மணிக்கு, திருச்சி வாழைக்காய் மண்டியில் உள்ள கணபதி லாரி புக்கிங் ஆபீஸ் முன்பாக, ரகசியத் தகவலின்பேரில் தனிப்படை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், திருச்சி தாராநல்லூர், இரட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் வசிக்கும் கருணாமூர்த்தி என்பவரின் மகன் சத்தியசீலன் என்றும், இவர் ஓட்டி வந்த வாகனம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காணாமல் போன ஜமால் முகமதுவின் வாகனம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்து விசாரித்ததில், ஜமால் முகமதுவின் வாகனம் மட்டுமல்லாமல், திருச்சி பீமநகர் ஹஜியார் தெருவிலிருந்து பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ரூ.60,000 மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றிய போலீஸார், சத்தியசீலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.