சபாநாயகர் கரு ஜயசூரியவை பதவியிலிருந்து நீக்கி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கண்டன தீர்மானமொன்றை கொண்டுவர சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதனை முன்பே அறிந்துகொண்டு, பிரதமருக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நாம் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்வோம்.
முக்கியமாக, சபாநாயகரை பதவியிலிருந்து விலக்கி ஜனாதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானமொன்றை கொண்டுவந்து, அதனூடாக 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை இல்லாமல் செய்ய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக இதனை மேற்கொள்ளவிருந்தனர். அதனை அறிந்துகொண்டே நாம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்தோம்.
அதுமட்டுமல்ல, தாமரை மொட்டுக் கட்சியின் பஷிலை முன்னிலைப்படுத்துவதும் இவர்களது நோக்கமாக இருந்தது.
உண்மையில், அரசாங்கத்துக்கு எதிரான மிகப்பெரிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது மக்கள் கொண்டுவந்துவிட்டார்கள்.
இதனை உணர்ந்து அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். நானும் அடுத்த 18 மாதங்களுக்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.
அத்தோடு, ஐக்கிய தேசிய முன்னணியிலும் கொள்கைத் திட்டமொன்று அவசியமாகும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலான மறுசீரமைப்புக்களை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.






