`ஒன்றுசேர்ந்து போராடுவோம்’ – டி.ராஜேந்தர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்தும், வாரியத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமைக்காமல், மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இதைக் கண்டித்து, தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், வரும் 5-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ராஜேந்தர்

பிரபல இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் தலைமை வகிக்கும் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய டி.ஆர், “எங்களது தாய்க் கழகமான தி.மு.க சார்பில் நிகழ்த்த உள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு, எங்கள் கட்சியின் சார்பில் முழு ஆதரவு தருகிறோம். மேலும், எங்களது இலட்சிய தி.மு.க சார்பில், வரும் ஏப்ரல் 9-ம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுடன் இணைந்து ஒரு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மேலும் அவர், “பா.ஜ.க நம்மைப் பிரித்து ஆள நினைக்கிறது. நடக்கும் எடப்பாடி அரசு, மோடியின் பினாமி அரசு. நாம், தனித்தனியாகப் போராடாமல் ஒன்றுசேர்ந்து போராடினால், மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.