குடும்ப பகை தீர இம்மலர்களால் வழிபடுங்கள்!

இறைசக்தி மிகுந்த புனிதமான மலர்களில் ஒன்று இது. சங்கு புஷ்பக் கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது.

இதன் பூக்கள் முற்றிலும் நீல அல்லது வெண்மை நிறத்திலும், நீலமும் வெண்மையும் கலந்த நிறத்திலும் காணப்படும்.

வெண் சங்கு புஷ்பத்தை சிவனாகவும், நீல நிற சங்கு புஷ்பத்தை விஷ்ணுவாகவும் ஆன்மிக ரீதியாகக் கருதுகிறார்கள்.

அதனால்தான் தமிழகத்தில் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலிலும், கோயமுத்தூரில், கோட்டைமேடு என்ற இடத்தில் சிவன் கோயிலிலும் சங்கு புஷ்பம் கொடி இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது.

கோயமுத்தூரில், கோட்டைமேடு என்ற இடத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழ மன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்ட 31வது சிவன் கோயில் இது என சொல்லப்படுகின்றது.

சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அசுரர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கிய தலம் இது .

இங்கே தேவர்கள் வந்தபோது, ஈஸ்வரன் சங்கு புஷ்பக் கொடிகளுக்கு இடையே லிங்க வடிவமாக எழுந்தருளி தேவர்களுக்கு காட்சியளித்தார். இதனால்தான் சங்கமேஸ்வரர் என பெயர் பெற்றார்.

இத்திருத்தலத்தில் உள்ள இறைவனுக்கு சங்கு புஷ்பங்களை சாத்தி வழிபட்டு சென்றால் தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும்.

அதோடு வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீர்ந்துவிடும் என்பது இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் செல்லும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இத்தலத்தில் தேவர்களுக்கு இறைவன் சங்கு புஷ்பக் கொடிகளுக்கு நடுவில் காட்சி கொடுத்து அருளியதால் இங்கே சங்கு புஷ்பக் கொடி தலவிருட்சமாகத் திகழ்கிறது.

சங்கு புஷ்பக் கொடியின் சிறப்பை உணர்த்தும் மற்றொரு சிறப்பான திருத்தலம் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலாகும்.

இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள சார புஷ்கரணியின் மேற்குக் கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோருக்குத் தனிச் சந்நதிகள் உள்ளன.

கோயில் பிராகாரத்தில் உள்ள உள்சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள், சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன.

இத்தலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் மட்டும்தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி ஆகிய ஐந்து தேவியர்களுடன் தரிசனமளிக்கிறார்.

திருக்கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் சங்கு புஷ்பக் கொடி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கொடியில் பூக்கும் சங்கு புஷ்பங்களை பக்தர்கள் பறித்து வந்து கோயிலில் உள்ள தாயாருக்கு சாத்தி அர்ச்சனை செய்தால் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை சங்கு புஷ்பத்தின் பெருமையை உணர்த்துகிறது.

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்தில்தான் மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வேதங்களை வைத்துக் காப்பாற்றினார் என்பதும், மார்க்கண்டேயருக்கு ஈசன் அருளிய தலம் இது என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.