ஜேம்ஸ் கேமரூன் இயக்கும் அவதார் படத்தின் புதிய அப்டேட்!

ஹாலிவுட் சினிமாக்களில் மிக முக்கியமான இயக்குநர் `அவதார்’ படத்தை இயக்கிய, ஜேம்ஸ் கேமரூன். `டெர்மினேட்டர்’, `டைட்டானிக்’, `ஏலியன்ஸ்’ எனப் பல மெகா பட்ஜெட் படங்களை இயக்கியிருக்கிறார். அது, பல விருதுகளையும் அள்ளிக்குவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, `அவதார்’ படத்தின் நான்காம் பாகத்துக்கான வேலையில் இப்பொழுதே மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டுவருகிறார்.

ஜேம்ஸ் கேமரன் அவதார்

2009-ல் வெளியான `அவதார்’ திரைப்படம், ஹாலிவுட் சினிமா வரலாற்றில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கியது. பல்வேறு தொழில்நுட்பங்களும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வி.எஃப்.எக்ஸும் அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் `அவதார்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. இந்நிலையில், மார்ச் 31 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜேம்ஸ் கேமரூன், “இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக உலகில் பல்வேறு நாடுகளைக் கருத்தில்கொண்டோம். எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள நாடான எஸ்டோனியா என்ற இடத்துக்குச் சென்றேன். படப்பிடிப்பை அங்கு நடத்தினால் நன்றாக இருக்கும் எனப் படக் குழுவினரோடு சேர்ந்து முடிவெடுத்தேன். இந்நாட்டைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், எஸ்டோனியர்களின் கதைகளைக் கேட்கும்போது, அவர்களது கடவுள் இயற்கையில் இருப்பது தெரியவந்தது. `அவதார்’ படத்தின் நாவி கதாபாத்திரத்தையும், எஸ்டோனியர்களையும் மையப்படுத்தி, நான்காம் பாகத்தில் எடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கிக்கொண்டிருக்கும் `அவதார் – 4′, 2024-ல் வெளிவர உள்ளது.