கடந்த யுத்த காலத்தின்போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த குண்டு துளைக்காத அதிசொகுசு மகிழுந்துகள் மற்றும் ஜீப் ரக வாகனங்கள் என்பன இன்றைய தினம் ஆழமான கடலில் மூழ்கி அழிக்கப்பட்டன.
8 மகிழுந்துகள் மேற்கு பிரதேச ஆழமான கடல் பகுதியில் கொட்டி அழிக்கப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பல வருடங்கள் பழமையான குறித்த வாகனங்களை புதுப்பிக்க பாரிய செலவு ஏற்படும் என்ற காரணத்திகால் இவற்றை அழிக்க அரசாங்கம் தீர்மானித்தாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.சீ.சீ உதயங்கள் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் வேறு பெறுமதியான பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த குண்டு துழைக்காத வாகனங்களை ஏலத்தில் விடவும் முடியாத நிலையிலேயே இவ்வாறு அழிக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக கடற்படையினருக்கு குறித்த எட்டு வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தன.
அமெரிக்கா பிரித்தானியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனங்களும் அவற்றுள் அடங்குகின்றன.
இதற்கிடையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்த வெலின் என்ற கப்பலும் எதிர்வரும் தினத்தில் அழிக்கப்படவுள்ளது.
குறித்த கப்பல் ஏல விற்பனைக்காக விடப்பட்ட போதிலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறைந்த அளவிலான விலை பெறுமதியையே கொண்டிருந்தது.
பின்னர், குறித்த கப்பல் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தது.
எனினும், அதனை தற்போது பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.