சூடுபிடிக்கும் மறுமணம்? மனைவி மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார்!

சசிகலா புஷ்பா மறுமணம் செய்து கொள்ள இருந்த ராமசாமி மீது அவரது மனைவி சத்யபிரியா மதுரை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கட்சி சார்பாக ராஜ்ய சபாவுக்கு ஜெயலலிதாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா.

ஜெயலலிதா பற்றியே நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சசிகலா புஷ்பாவை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி உத்தரவிட்டார்.

தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த சசிகலா புஷ்பா சில நாட்களுக்கு முன் விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில், ராமசாமி என்பவருடன் சசிகலா புஷ்பாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக பத்திரிக்கை ஒன்று வைரலாக பரவியது.

இதுகுறித்து சசிகலாவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “சசிகலாவிற்கு சட்ட ஆலோசகராகவும், நல்ல நண்பராகவும் இருந்து வருகிறார் ராமசாமி. அரசியல் ரீதியாக எந்த முடிவு எடுத்தாலும் ராமசாமியிடம் ஆலோசனை கேட்டு தான் எடுப்பார்.

இருவரும் திருமணம் செய்து கொள்வதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது. சசிகலா விவாகரத்து பெற்றுவிட்டார்.

ஆனால், ராமசாமிக்கு வாரிசு இருக்கிறது, அந்த பிரச்சனை இல்லை என்றால் திருமணத்தை அறிவிப்பதில் சசிகலா தயங்கமாட்டார்” என கூறுகின்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ராமசாமியின் மனைவி, தன் கணவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 2014ம் ஆண்டு தனக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், நீதிபதி என்று கூறியே தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஒரு வருடம் மட்டுமே தன்னுடன் இணைந்து வாழ்ந்த ராமசாமி, குடும்ப பிரச்சனையின் காரணமாக தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வெளியான பத்திரிக்கையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்ததாகவும், ராமசாமி தன்னுடன் சேர்ந்தே வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரமாக திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.