நாகர்கோவில் அனந்தன்குளத்தில் படகுசவாரிக்காக கொண்டு வரப்பட்டுள்ள படகுகள் ஓட்டை உடைசலாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், திற்பரப்பு அருவி, முட்டம், வட்டக்கோட்டை கடற்கரைகள், சிதறால் சமணர் கோயில் என பலவகைப்பட்ட சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கியது குமரி மாவட்டம். இந்த வரிசையில் நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட அனந்தன் குளத்தில் படகுசவாரி ஏற்படுத்தப்பட்டு புதிய சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு கோடையின்போது சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட அனந்தன்குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதைதொடர்ந்து படகு குழாம் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 1 -ம் தேதி அனந்தன் குளத்தில் படகு சவாரி துவங்கப்படுவதாக மேல்சபை எம்.பி. விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். இதற்காக குற்றாலத்தில் இருந்து துடுப்பு படகுகள் இரண்டு, சைக்கிளிங் படகுகள் நான்கு என மொத்தம் 6 படகுகள் அனந்தன்குளம் படகு குழாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குற்றாலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த படகுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை. அதிலும் படகுகள் ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. சைக்கிளிங் வகை படகுகளில் பெடல் அருகேயே விரிசல் இருப்பது கண்கூடாக தெரிகிறது. படகோட்டி இல்லாமல் சுற்றுலா வரும் பொதுமக்கள் தாங்களே படகுகளை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஓட்டைபடகுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் படகு சவாரி செய்பவர்களுக்கு ஆபத்து இன்னும் அதிகம். தமிழகத்தில் இன்ப சுற்றுலா செல்பவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவரும் நிலையில் ஓட்டை படகுகளை சவாரிக்காக விட்டு ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளும் நிலையாக உள்ளது. ஓட்டை படகுகளை மாற்றி நல்ல நிலையில் உள்ள படகுகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்கு பார்வையிட வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.