இலங்கை அகதி மாணவனுக்கு தமிழகத்தில் ஏற்பட்ட நிலை! இருவர் கைது!

தமிழகத்தின் மதுரை நகரில் உள்ள இலங்கையைச் சேர்ந்த அகதி மாணவர் ஒருவரை கத்தியால் குத்திய இரண்டு சக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை, வேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்று வரும் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அர்ஜூன் என்ற மாணவரே இவ்வாறு கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த, மாணவர் உறவினர் ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் தங்கி படித்து வருகின்றார்.

இந்நிலையில், அதே பள்ளியில் கல்வி கற்கும் சுண்ணாம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற மாணவருடன் குறித்த மாணவருக்கு முன் விரோதம் காணப்பட்டுள்ளது.

இதனைக் காரணமாக வைத்து இலங்கை அகதி மாணவன் அர்ஜூனிடம், கார்த்திக் ராஜா மற்றும் அவரது நணபர் சரவணன் ஆகியோர் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவர் அர்ஜூனின் தலை மற்றும் கைகளை தாக்கியுள்ளார்.

இதன்காரணமாக மாணவர் அர்ஜூனின் இடது கையின் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளன.

தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இணைந்து அர்ஜூனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மாணவர் அர்ஜூன் மதுரை இராஜாஜி அரச பொது வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாணவர்களான கார்த்திக் ராஜா மற்றும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்ற மேலூர் பொலிஸார் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மீதும் 341, 307 மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.