ஜெ. கால்கள் வெட்டப்படவில்லை..கால் கட்டை விரல்களை நான்தான் கட்டினேன்: டிரைவர் அய்யப்பன்

சென்னை: பலரும் சொல்வது போல ஜெயலலிதாவின் கால்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்று அவரது கார் ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவரது உதவியாளர், இல்லத்தில் வேலை செய்தவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.

driver_ayyappan  ஜெ. கால்கள் வெட்டப்படவில்லை..கால் கட்டை விரல்களை நான்தான் கட்டினேன்: டிரைவர் அய்யப்பன் driver ayyappan

10 ஆண்டு காலம் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த ஐயப்பனுக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்தது. அதன்படி, விசாரணை ஆணையத்தில் ஐயப்பன் 2வது முறையாக வியாழனன்று காலை நேரில் ஆஜரானார்.

விசாரணை முடிந்த பிறகு வெளியில் அந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் 1991 முதல் ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றி கொண்டிருந்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் அவர் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.

அவர் சிகிச்சையிலிருந்து 75 நாளும் மருத்துவமனையில் தான் இருந்தேன்; ஆனால் மூன்று முறை தான் ஜெயலலிதாவை பார்த்தேன். ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து நவம்பர்  19-ம் தேதி வார்டுக்கு மாற்றப்படும் போதும் ஜெயலலிதாவை சந்தித்தேன். பலரும் சொல்வது போல ஜெயலலிதாவின் கால்கள் எதுவும் அகற்றப்படவில்லை.

ஜெயலலிதா இறந்தப்பிறகு அவரது கால் கட்டை விரல்களை கட்டுவது போன்ற இறுதிச்சடங்குகளை நான்தான் செய்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஐயப்பன் விசாரணை ஆணையத்தில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.