ஐரோப்பாவை உறைய வைக்கும் பனிப்புயல்! 55 பேர் பலி!

ஐரோப்பாவில் வீசும் கடுமையான பனிப்புயலால் ஸ்காட்லhந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நகரங்களை வெண்பனி போர்த்தியுள்ளது.

சாலைகள், விமான நிலையங்களிலும் பனி உறைந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய கண்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.

சராசரியாக மைனஸ் 10 டிகிரி அளவிலேயே வெப்பநிலை நீடிப்பதால் கடுமையான பனிப்புயலையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளைப் பனி போர்த்தியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான நிலையங்களிலும் இதே நிலை தான்.

தெளிவான வானிலை இல்லாததன் காரணமாகவும் டப்லின் விமான நிலையத்தை வெண்பனி போர்த்தி இருந்ததாலும் விமான சேவைகள் நாளை வரை நிறுத்தப்பட்டுள்ளன. ஐரிஸ் ரயில் சேவைகளும் நாளை வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத நிலை இருக்கிறது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, வணிக வளாகங்களும் அதிக அளவில் மூடியே கிடக்கின்றன. பனிப்புயல் காரணமாக வீடற்றோரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

வயதானோர், குழந்தைகள் மற்றும் எளிதில் நோய் தொற்றும் அபாயம் இருப்பவர்களுக்கு இந்த பனிப்புயலால் அதிக ஆபத்துகள் இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

பிரெஞ்ச், பாரிஸ் அரசுகள் வீடற்ற 3 ஆயிரம் பேருக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன.

அதிகப்படியான பனிப்பொழிவால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக போலந்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவில் 7 பேர், செக்குடியரசில் 6 பேர், லிதுவேனியாவில் 5 பேர், பிரான்ஸில் 4 பேர், செர்பியா, இத்தாலி, ஸ்லோவேனியா, ரொமானியாவில் தலா 2 பேர், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பனிப்போர்வையால் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா விமான நிலையம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மற்றும் எடின்பர்க் விமானநிலையங்களும் ஸ்தம்பித்தன.

தெற்கு பிரான்சில் 2 ஆயிரம் கார்கள் ஹெரால்ட் பகுதியில் கடுமையான பனியால் சாலைகளில் உறைந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்தை தவிர்க்குமாறு ஸ்வீடன் சாலை போக்குவரத்துத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மோசமான பனிப்புயலுக்கு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பெயரை வைத்துள்ளன.

பிரிட்டன் ‘கிழக்கில் இருந்து வந்த பீஸ்ட்’ என்றும் டச் சைபீரியன் பியர் என்றும், ஸ்வீடன் ஸ்னோ கேனான் என்று அழைக்கிறது.