மந்திகளால் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை!! கச்சேரியில் களேபரம்!!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துக் காணப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகர்ப்புறத்துக்குள் ஊடுருவிய நிலையில் அவை மாவட்டச் செயலகத்தின் கட்டட உட்பகுதிகளுக்குள் மறைந்து வாழ்ந்து தற்போது பெருகி வருகின்றன.
ஆரம்பத்தில் 5 வரையில் காணப்பட்ட குரங்குகள் தற்போது பத்துவரையில் காணப்படுகின்றன. அவை காலை மாலை வேளைகளில் மாவட்டச் செயலக வளாகத்தில் உலாவி, அங்கு தரிக்கப்படுகின்ற வாகனங்களின் கண்ணாடிகளை பிடுங்கிச் செல்வதோடு தலைக் கவசங்களையும் சேதப்படுத்துகின்றன.அத்துடன் செயலகக் கட்டடத்தின் கூரைத் தகடுகளை பிரித்தும் உட்சென்று தங்குகின்றன. இதனால் எதிர்காலத்தில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாய மும் பொதுமக்களை தாக்கும் நிலமையும் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே அதற்கு முன்னர் மாவட்டச் செயலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்ட போது, ஏற்கனவே பல தடவைகள் உரிய தரப்புக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. எனினும் அவற்றை பிடிக்க முடியவில்லை. இதனால் பெரிய கூடு ஒன்று தருவித்து அவற்றைப் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் குரங்குகள் அந்தக் கூட்டின் பக்கம் செல்லாது, வெளியில் சேதங்களை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும் குறித்த குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.