நடிகை ஸ்ரீதேவியின் உடல், துபாயிலிருந்து இந்தியாவுக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அமீரகச் சட்டப்படி நடைமுறைகளை மேற்கொள்ள மூன்று நாள்கள் ஆகின. ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. அதனால் தீவிர போலீஸ் விசாரணைக்குப் பிறகே அவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர துபாய் அனுமதியளித்தது. அதேவேளையில், ஸ்ரீதேவியின் உடலை போனி கபூர் பெயரில் இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை. அமீரகச் சட்டத்தின்படி, சுற்றுலா விசாவில் செல்பவர்கள் மரணமடைந்தால், உடல்களை ஒப்படைப்பதில் கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்நாட்டைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற ஒருவர், அதற்கு உறுதியளிக்க வேண்டும். அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப், ஸ்ரீதேவியின் உடலைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வர உதவியுள்ளார்.

எம்பாமிங்கூட அஷ்ரப் பெயரில்தான் மேற்கொள்ளப்பட்டது. எம்பாமிங் விண்ணப்பத்திலும் இவரே கையொப்பமிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவியை உயிரற்ற உடலாகப் பார்த்த தருணம் குறித்துக் கூறிய அஷ்ரப், “நான் நடிகை ஸ்ரீதேவியின் உடலைப் பார்த்தபோது அவர் அழகுற உறங்குவது போன்றே இருந்தது. சினிமாவில் எப்படிப் பார்த்தேனோ, அதே அழகுடன் அப்போதும் இருந்தார். சில மீடியாக்கள்தான் அவரின் பின்தலையில் அடிபட்டிருப்பதாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளன. கனத்த இதயத்துடன் அவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்கிறார்
அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் அஷ்ரப். அமீரகத்தில் இறக்கும் இந்தியர்களின் உடல்களைத் தாய்நாட்டுக்கு அனுப்பும் சேவையில், கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார். இதுவரை 4,700 உடல்களை அமீரகத்திலிருந்து பல நாடுகளுக்கு அனுப்ப உதவியாக இருந்துள்ளார்.
ஆஜ்மனில் வசித்து வந்த அஷ்ரப், ஒருமுறை ஷார்ஜா மருத்துவமனைக்கு உடல் நலம் பாதித்த நண்பர் ஒருவரைப் பார்க்கச்சென்ற சமயத்தில், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தனர். அவர்களை அஷ்ரப் விசாரித்தபோது… `எங்கள் தந்தை இறந்துவிட்டார். அவரின் உடலைத் தாய்நாட்டுக்கு எப்படிக் கொண்டுசெல்வது எனத் தெரியவில்லை’ எனக் கதறினர். அஷ்ரப் அந்த இளைஞர்களுக்கு உதவும் நடைமுறைகளை மேற்கொண்டார். அதற்கு ஐந்து நாள்கள் பிடித்தன. அந்தளவுக்கு அமீரகத்தின் சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தன.
கட்டட வேலைக்கும் கூலி வேலைக்கும் அமீரகத்துக்கு வருபவர்களால், கடினமான சட்டதிட்டங்களை அவ்வளவு சாதாரணமாக திருப்தி செய்துவிட முடியாது என்பதை உணர்ந்துகொண்ட அஷ்ரப், தொடர்ந்து தானே முன்வந்து இந்தச் சேவையைச் செய்யத் தொடங்கினார். அப்போது, அமீரக இந்தியர்களுக்கு அஷ்ரப் ஓர் ஆபத்பாந்தவனாகக் காட்சியளிப்பார். முதலில் மாதத்துக்கு 5 அல்லது 6 உடல்களை இந்தியாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தவர், இப்போது 30 முதல் 40 உடல்களை அனுப்பிவைக்கிறார். இன்னொரு விஷயம் என்னவென்றால், அஷ்ரப்பின் சேவையைக் கேள்விப்பட்டு வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்துகூட அழைப்புகள் வருகின்றன. `எங்கள் தந்தை இறந்துவிட்டார். தயவுசெய்து அவர் உடலை மீட்டு அனுப்புங்கள்’ என்ற வார்த்தைகள்தான் மறுமுனையிலிருந்து அழுதவாறே கேட்கும்.

முதலில் இந்தியர்களுக்கு மட்டும் உதவிக்கொண்டிருந்த அஷ்ரப், இப்போது எல்லோருக்கும் உதவத் தொடங்கியுள்ளார். ஓர் உடலை தாய்நாட்டுக்கு அனுப்ப ஆவணங்கள் ஒப்படைப்பது முதல், உடலைப் பெற்றுத்தருவது வரை 200 தினார் வரை செலவாகும். இந்தத் தொகையை மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து அவர் வாங்கிக்கொள்கிறார். மற்றபடி எந்தப் பணமும் பெறுவதில்லை.
“பிறப்புபோலவே இறப்பும் வாழ்வின் ஓர் அங்கம்தான். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று துடிப்பார்கள். எப்போது, உடல் வருமோ என்று பதறியபடி தாய்நாட்டில் காத்திருப்பார்கள். அந்த வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் என்னால் முடிந்தவரை இதை ஒரு சேவையாகச் செய்கிறேன். என்னால் உதவி பெற்று உடலுடன் தாய்நாட்டுக்குச் செல்பவர்கள், எனக்கு போன் செய்து நன்றி கூறுவதைக்கூட நான் விரும்புவதில்லை. அதனால் `தாய்நாடு சென்ற பிறகு, தேவையில்லாமல் எனக்கு போன் செய்ய வேண்டாம்’ என்று சொல்லிவிடுவேன். அதேபோல், போனில்கூட அதிக நேரம் நான் யாரிடமும் பேசுவதில்லை. ஏனென்றால், என்னால் உதவி பெறக்கூடியவர்கள் யாராவது அதனால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது அல்லவா!” என்று கூறும் அஷ்ரப், “இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் உடலைக்கூட அனுப்பிவைக்கவேண்டிய நிலை எனக்கு வரும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை” என்றார்.






