சமகால அரசாங்கம் முடிவுக்கு வரும் வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பெற்றது. இதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவிடம் தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமகால அரசியல் நிலைமைக்கமைய எதிர்க்கட்சி ஆசனங்களை பெறுவதற்கு, கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்புபட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி தனி குழுவாக ஆசனம் பெற வேண்டும்.
அப்படியில்லை என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருந்து விலக வேண்டும். இல்லை என்றால் மஹிந்த ராஜபக்சவினால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொள்ள முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் கூட்டு எதிர்க்கட்சி இந்த கோரிக்கையை விடுத்த போதிலும், அப்போது காணப்பட்ட சட்டரீதியான பிரச்சினை காரணமாக அந்த கோரிக்கையும் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.