இந்தியா சேலம் பெரமனூர் நாராயணப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 55). இவர் வீட்டில் வைத்து இட்லி, புரோட்டா, தயாரித்து விற்பனை செய்து வந்தார்.அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் அவர் சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக உறவினர்கள் யாரும் அவரை பார்க்க உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் அங்கு இருந்துள்ளார்.உறவினர்களுடன் பேசினால் சகஜ நிலைக்கு திரும்புவார் என்றும் கூறிய டாக்டர்கள் தனி அறைக்கு அவரை மாற்றினர்.
அப்போது உடலில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய்கள் நீக்கப்பட்டதால் கடந்த திங்கட்கிழமை அன்று கோமா நிலைக்கு சென்றார். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி டாக்டர்களிடம் கேட்டபோது கிறிஸ்டோபரின் மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லாததால் அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாகவும் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை, உறவினர்களுக்கு சொல்லி இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கூறினர்.
இதையடுத்து உறவினர்களும் கிறிஸ்டோபரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் உடலை வைத்து கதறி அழுதனர்.அப்போது திடீரென்று கிறிஸ்டோபருக்கு இருமல் எடுத்தது. தொடர்ந்து அவர் எழுந்திருக்க முயன்றார்.
இதைப்பார்த்த உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். துக்கம் விசாரிக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.அவர் உயிருடன் இருப்பதை அறிந்த உறவினர்கள் உடனே அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் கிறிஸ்டோபரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






