முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை, கூட்டு அரசு அரசியல் பழிவாங்கலுக்காக ஜெனிவாவில் காட்டிக்கொடுக்கும்.
இதன் பின்னர் இலங்கை பன்னாட்டு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை தொடர்பில், மக்களால் வெறுக்கப்பட்ட கூட்டு அரசை ஆதரிக்கும் மேற்கு நாடுகள் கடந்த கூட்டத் தொடர்களில் இலங்கைக்கு எதிராகப் பெரிய அழுத்தங்களைப் பிரயோகித்தன. இலங்கை தாக்கங்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டது.
கூட்டு அரசும் அவற்றை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக மௌனம் காத்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தின் அசமந்தப் போக்கைக் கண்டித்து அதிருப்தி அறிக்கையை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நாட்டில் பெரிய அளவில் அரசியல் நெருக்கடிகள் இடம்பெற்றுள்ளன.
இதனைக் காரணம் காட்டி கூட்டு அரசு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசைக் காட்டிக்கொடுத்து தமது அரசியல் பழிவாங்கலை நிறைவேற்றிவிடும் என்ற அச்சம் தற்போது தோன்றியுள்ளது.
கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிப்பு
எதிர்க்கட்சிப் பதவி தொடர்பில் சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதனைப் பயன்படுத்தி சிலர் நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனவாதத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டமையை தேர்தல் பெறுபெறுகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன. தமக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றப்பட்டதையும், அதன் காரணமாக இனிவரும் காலங்களில் எவ்வித பயனும் இல்லை என்பதையும் உணர்ந்த தமிழ் மக்கள் யதார்த்த நிலைக்கு உட்பட்டு சுயமான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் தீர்மானத்தை மதித்துச் செயற்படவேண்டும். மக்கள் புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் பொழுது அதற்குத் தடையாக அரசியல் சூழ்ச்சிகளை பிரயோகிப்பது அந்த மக்களுக்கு விரோதமான செயலாகவே காணப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் கூட்டு அரசின் அரசியல் நலனை மாத்திரமே பற்றி கவனம் செலுத்துகின்றார்.
நாட்டின் தேசிய நலன் குறிப்பாக தமது இனத்தின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தத் தவறி விட்டமையே அவரது பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனைக்கு முக்கிய காரணம் -– -என்றார்.






