விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரியான கணவரின் இறுதி ஊர்வலத்தில் பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையுடன் சீருடையில் ராணுவ பெண் அதிகாரி ஒருவர் கலந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo Credit: FB/IndianDefence
இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். இவரது மனைவி குமுத் மோர்கா, ராணுவத்தில் மேஜராகப் பதவி வகித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த மோர்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மனைவியிடம் விடைபெற்று விட்டு கடந்த 15-ம் தேதிக்குப் பணிக்குச் சென்ற டி.வட்ஸ், மீண்டும் திரும்பவே இல்லை. அசாமின் மஜூலித் தீவுப் பகுதியில் வட்ஸ் மற்றும் அவரது சக விமானப்படை விமானி ஜெய் பால் ஜேம்ஸ் ஆகியோர் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர் உயிரிழந்த சில நாள்களில் மோர்கா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தநிலையில், வட்ஸின் இறுதி ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. அந்த இறுதி ஊர்வலத்தில் ராணுவச் சீருடை அணிந்தபடி, பிறந்து 5 நாள்களே ஆன தனது குழந்தையுடன் மேஜர் குமுத் மோர்கா கலந்துகொண்டார். தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருடன், கையில் குழந்தையை ஏந்தியபடி கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் செல்வது போன்ற புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.






