இலங்கையில் தமிழீழம் அமைய, அரசியல் தீர்வு வரவேண்டும்.. மலேசிய துணை முதல்-மந்திரி..

மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்-மந்திரி பேராசிரியர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்க கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் முதல் அமர்வு நடைபெற்றது. இதனை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தொடங்கி வைத்தார். கொண்டல்சாமி வரவேற்றார். கவிஞர் காசிஆனந்தன், சினிமா இயக்குனர் அமீர் உள்பட பலர் பேசினார்கள்.

முன்னதாக பினாங்கு மாகாண துணை முதல்-மந்திரி பேராசிரியர் ராமசாமி அளித்த பேட்டி வருமாறு:-

இந்த மாநாடு நடத்த எத்தனை சிரமப்பட்டு இருப்பார்கள் என்று தெரியும். இலங்கை மக்களுக்கு தமிழீழம் என்பது முக்கியமான ஒன்று. போராட்டத்திற்கு பிரபாகரன் தள்ளப்பட்டார். ஈழத்தில் அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு கொன்றுகுவித்தது. ஈழ மக்களுக்கு முறையான விடுதலை இல்லை. பல பிரச்சினைகளை இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழீழம் அமைய விரைவில் அரசியல் தீர்வு வர வேண்டும். ஏன் இந்த மக்களுக்கு சரியான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடந்தது கொடூரமானது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்துவோம் என சொல்லியும் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான். இலங்கையில் தமிழீழம் அமைவது தான் நோக்கம். அதற்கான அரசியல்தீர்வு, அதற்கான முயற்சி தான் இந்த மாநாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலையில் நடந்த அமர்வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பினாங்கு துணை முதல்-மந்திரி பேராசிரியர் ராமசாமி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.