இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது..! கோலி அபாரம்!

தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, முதல் முறையாக ஒரு நாள் தொடரில் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என அபாரமாக கைப்பற்றியுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. சதம் விளாசிய கேப்டன் கோலி இந்தப் போட்டியில் வெற்றிக்கு வழிவகுத்தார். போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-வது போட்டியில் வென்றது மூலமே தொடர் இந்திய வசமானது. இந்நிலையில், செஞ்சூரியன் மைதானத்தில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் கோலி தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகள் சரிந்தன. 46.5 ஓவர்களில் அந்த அணி 204 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர்  4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, சாஹல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி வீரர்களுக்கு நிகிடியின் பந்துவீச்சு சிக்கலை உண்டாக்கியது. தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா 15 ரன்களிலும், ஷிகர் தவான் 18 ரன்களிலும் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். நெருக்கடியில் இந்திய அணி இருந்தபோது களமிறங்கிய கேப்டன் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை நிலைத்துநின்று விளையாடிய கோலி – ரஹானே ஜோடி இந்திய அணிக்கு அபார வெற்றியை பெற்றுத்தந்தது. 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து வென்றது இந்திய அணி. விராட் கோலி 129 ரன்களும், ரஹானே 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றிபெற்றது. இதன்மூலம் ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.