எச்சரிக்கை மணி அடித்துள்ள பொதுமக்கள்! – கபீர் ஹாசிம் அறிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஆளுந்தரப்புக்கு பொதுமக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ள அவர், ”கடந்த காலங்களில் நாங்கள் பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளோம்.

ஆனாலும் அவற்றின் பலன்கள் காலங்கடந்தே மக்களை வந்தடையும் என்பதால் பொதுமக்களால் அவை உரிய முறையில் உணரப்படவில்லை.

அதே நேரம் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச அரசாங்கத்தின் கடன் சுமை காரணமாகவே அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றும் காலம் கனியவில்லை. அந்தக் கடன்களை அடைப்பதற்கு அரசாங்கம் தீவிர கவனத்துடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எதுவாக இருந்தாலும் இந்த தேர்தல் மூலம் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளனர். அதனை நாம் உணர்ந்திருப்பதுடன் பொதுமக்களின் தீர்ப்பை தலைசாய்த்து ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் கபீர் ஹாசிம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.