மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை நடத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அரசுக்கு எதிராகக் காட்டமான விமர்சனத்தையும் அவர் முன்வைக்கிறார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பின் மூலம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என நம்பிக் கொண்டிருக்கிறார். ‘தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தாலும் அவர்கள் அனைவரும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்தான். அரசுக்கு எதிராக அவர்கள் செல்ல மாட்டார்கள்’ எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார் தினகரன். இந்தப் பயணத்தில் விவசாயிகள் பிரச்னை, கெயில், மீத்தேன் விவகாரம், அரசின் செயல்பாடு உள்ளிட்டவைகளை முன்வைத்துப் பேசுகிறார். தஞ்சை மாவட்டத்தில் நடந்த பயணத்தில் பேசிய தினகரன், ‘இப்போது ஆட்சியில் உள்ளவர்களில், 6 பேரைத் தவிர எங்கள் அணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வேம். அப்படி வந்தால், தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நான் முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன். என்னோடு வந்த 18 எம்.எல்.ஏ-க்களும் தியாகிகள்; அவர்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படும்’ என்றார். அவரது இந்தக் கருத்தால் கொதித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஹவாலா முறையில் தொகுதி முழுக்க 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்ற திமிரில் பேசுகிறார் தினகரன். தி.மு.கவோடு இருக்கும் கூட்டினால்தான், ஆறு அமைச்சர்களை நீக்க வேண்டும் என்கிறார். இனி அவரோடு எந்தக் காலத்திலும் சமரசம் கிடையாது’ என்றார். அதேநேரம், தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனும், ‘ இந்த ஆட்சியை விரைவில் அப்புறப்படுத்துவோம். இவர்களால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டோம். தீர்ப்பு வந்த அடுத்த சில நாட்களில், நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற முழக்கத்தோடுதான் சட்டசபைக்குள் செல்வோம்’ என்றார் ஆவேசத்துடன்.
தினகரன் தரப்பினரின் இந்தக் கருத்துக்கள் பற்றி, மூத்த அமைச்சர்கள் சிலரிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், “ஆட்சிக்கு எதிராக வேண்டுமென்றே அவதூறான கருத்துக்களை தினகரன் தரப்பினர் பேசி வருகின்றனர். தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்விதமாகத்தான் இவ்வாறெல்லாம் பேசுகின்றனர். அவர்கள் யாரும் அ.தி.மு.கவினர் அல்ல. கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் கருத்துக்களுக்கு எதிராக மனம் திறந்து பேசினார் முதல்வர். அவர் பேசும்போது, ‘ஆட்சி அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் வரப் போவதில்லை.
தகுதிநீக்க வழக்கில் தினகரனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அந்த 18 பேரும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்தான். அவர்கள் நம்முடன்தான் இருப்பார்கள். ஒரு சிலர் வேண்டுமானால் நமக்கு எதிராகப் பேசலாம். நம்பிக்கை வாக்கெடுப்பு என யாராவது பேசினால், அவர்களை கட்சியை விட்டு நீக்கிவிடுவோம். நமக்கு எதிரான மனநிலையில் 11 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஏழு பேர் நம்மிடம் சமசரம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றிக் கேட்கப் போவதில்லை. தினகரன் துணையோடு தி.மு.கவும் மனு கொடுக்க வாய்ப்பில்லை. ‘ பலத்தை நிரூபித்துக் காட்டுங்கள்’ என ஆளுநரும் உத்தரவிடப் போவதில்லை.
டெல்லி மேலிடம் நம்மிடம் நல்ல உறவில் இருக்கிறது. 2019 தேர்தலின்போது பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஓட்டுப் போடும் வயதுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் மத்தியில் மோடியின் இமேஜை வளர்ப்பதற்காக, பாடப்புத்தகங்களில் மோடியை இடம்பெறச் செய்யும் வேலைகள் நடக்கின்றன. அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நாமும் கொண்டு சேர்ப்போம். இந்தியா முழுக்க இந்த முயற்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் அதைச் செயல்படுத்துவதில் ஒன்றும் தவறு இல்லை. இதற்காகத்தான் செங்கோட்டையனை வந்து சந்தித்தார் தமிழிசை. அவரே நம்மிடம் நேரடியாக வந்து கேட்கிறார் என்றால், நம்முடன் உறவைத் தொடரத்தான் டெல்லி மேலிடம் விரும்புகிறது என்று அர்த்தம். தமிழிசைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அமித் ஷா. மோடியே கூறியதால்தான் தலைமைச் செயலகத்துக்கு தமிழிசை வந்தார். பா.ஜ.கவின் நேரடி கூட்டணியில் நாம் இல்லை என்றாலும், இதைச் செயல்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது?
நம்மை நேரடியாகப் பாதிக்கும் முத்தலாக் விவகாரம், ஹஜ் யாத்திரை மானியம் ரத்து, பேரறிவாளன் விடுதலை, இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்வது போன்றவற்றில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்போம். ஸ்டாலின், தினகரன் போன்றவர்களைவிடவும் நம்மைத்தான் டெல்லி நம்புகிறது. நம்முடைய வாக்கு வங்கியை பாதிக்காமல் நல்லுறவைப் பாதுகாப்போம். அதேபோல், தினகரனின் வெற்றுக் கூச்சல்களுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர் வெறுமனே கத்திக் கொண்டிருக்கிறார். காமராஜர் ராஜாஜியைத்தான் பிரதான எதிரியாகப் பார்த்தார். பக்தவத்சலம், சி.சுப்ரமணியம் போன்றவர்களை அவர் எதிரியாகப் பார்க்கவில்லை. அதேபோல்தான், தினகரனைத்தான் நான் பிரதான எதிரியாகப் பார்க்கிறேன். வெற்றிவேலோ செந்தில்பாலாஜியோ எனக்கு எதிரிகள் அல்ல. நம்மை எதிர்க்கும் ஒரு சிலரும் நம்மிடம் வந்து சேருவார்கள்’ என உறுதியாகக் கூறியிருக்கிறார்” என்றார் விரிவாக.
‘தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் தினகரன் மீதான அமலாக்கத்துறையின் பிடியும் இறுகும்’ என்கின்றனர் நீதித்துறை வட்டாரத்தில். தீர்ப்பை ஆவலோடு எதிர்நோக்குகின்றனர் தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏக்களும்!