தமிழ்நாட்டில் தாலி கட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மணமகன் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை.
இவரின் மகன் வெங்கடேஷ் (26) என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
முகூர்த்தம் காலை 9.30 மணிக்கு குறிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 7.30 மணிக்கு மணப்பெண் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மாப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் வர இருந்த நிலையில், காலை 8.30 மணிக்கு மணமகன் வெங்கடேஷ் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்டநேரமாகியும் அவர் வெளியில் வராததால் கதவை உடைத்து சென்று உறவினர்கள் பார்த்த போது அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
திருமண மண்டபத்தில் கனவுகளுடன் காத்திருந்த மணப்பெண் இதை கேட்டு அதிர்ச்சியில் கதறினார்.
வெங்கடேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.