கோயம்புத்தூரில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய புருஷோத்தமன் என்னும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 57 வயதாகும் இவர் தனது முதல் மனைவியை இழந்தவர், இவருக்கு 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் புருஷோத்தமன் மீதும், மெட்டி ஒலி எனும் திருமண தகவல் மையத்தின் மீதும் திருமண மோசடி புகார் ஒன்றை, பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த குமுதவள்ளி உட்பட 8 பெண்கள், கோவை கிழக்குப்பகுதி மகளிர் பொலிசில் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, புருஷோத்தமன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்த பொலிசார், காந்திரபுரத்தைச் சேர்ந்த திருமண தகவல் மைய நிர்வாகிகளான மோகன், வனஜாகுமாரி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், திருச்சியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனையும் கைது செய்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
புருஷோத்தமன், அந்த திருமண மையத்தின் உதவியுடன், பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பணத்தை அபகரித்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, புருஷோத்தமனின் சொத்துக்களை முடக்க பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் தான் பெண் பார்க்க செல்லும் வீட்டாரின் வசதி குறித்து முதலில் உறுதி செய்வதாகவும்,
பெண்ணின் குடும்பத்தினரிடம் தன்னை தொழிலதிபர் போல காட்டி விடுவதாகவும் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமண தகவல் மையத்தின் உதவியுடன் தன்னை தொடர்பு கொள்ளும் பெண்ணை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து, திருமணம் முடிந்ததும் தொழிலில் நட்டம் ஏற்பட்டது என்றுக் கூறி, அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.







